மூடுபனியின் தாக்கத்தினால் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று வாகனங்கள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகின.
மூடுபனியால் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்- 2 பேர் பலி
பதிவு: நவம்பர் 09, 2020 15:36
விபத்தில் சிக்கிய வாகனத்தை அகற்றும் காட்சி
ஹத்ராஸ்:
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பனிக்காலம் தொடங்கி உள்ளது. காலை நேரத்தில் கடும் மூடுபனி நிலவுகிறது. அத்துடன் காற்றும் மாசுபட்டுள்ளதால், சாலைகளில் புகைப்படலம் போர்த்தியதுபோன்று காட்சியளிக்கிறது. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை மெதுவாக ஓட்டுகின்றனர். இருப்பினும் சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது.
இன்று காலை 7.15 மணியளவில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் சென்ற வாகனம் ஒன்று, கடுமையான மூடுபனி கண்ணை மறைத்ததால் முன்னால் சென்ற மற்றொரு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆனால் விபத்து ஏற்பட்டது தெரியாமல் பின்னால் வந்த வாகனங்களும் அவற்றின் மீது அடுத்தடுத்து மோதின. இவ்வாறு மொத்தம் 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி உள்ளன.
ஹத்ராஸ் மாவட்ட எல்லைக்குள் நடந்த இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்கள் கிரேன்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்து சரி செய்யப்பட்டது. வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :