செய்திகள்
நளின்குமார் கட்டீல்

காங்கிரசின் கோஷ்டி பூசல் தெருவுக்கு வரும்: நளின்குமார் கட்டீல்

Published On 2020-11-09 01:43 GMT   |   Update On 2020-11-09 01:43 GMT
இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு காங்கிரசின் கோஷ்டி பூசல் தெருவுக்கு வரும் என்று கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கூறினார்.
துமகூரு :

கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சிரா மற்றும் ஆர்.ஆர்.நகர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும், மேல்-சபையில் 4 தொகுதிகளுக்கு தேர்தலும் நடைபெற்று உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. ஆர்.ஆர்.நகரில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், சிராவில் 20 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்திலும் எங்கள் கட்சி வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டி பூசல், எங்கள் கட்சியின் வெற்றிக்கு உதவும்.

மேலும் இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதியிலும் முதல்-மந்திரி எடியூரப்பா பிரசாரம் செய்தார். இது மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. காங்கிரசில் ஆர்.ஆர்.நகர் தொகுதிக்கு டி.கே.சிவக்குமாரும், சிராவுக்கு சித்தராமையாவும் பொறுப்பாளர்களாக செயல்பட்டுள்ளனர். சிராவில் காங்கிரசை தோற்கடிக்க டி.கே.சிவக்குமார் முயற்சி செய்துள்ளார். அதே போல் ஆர்.ஆர்.நகர் தொகுதியில் காங்கிரசை தோற்கடிக்க சித்தராமையா ரகசியமாக முயற்சி மேற்கொண்டார்.

இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு காங்கிரசின் கோஷ்டி பூசல் தெருவுக்கு வரும். காங்கிரஸ் தோல்வி அடையும்போது, அவர்களுக்கு மின்னணு வாக்கு எந்திரங்கள் மீது சந்தேகம் வரும். வெற்றி பெற்றால் வாக்கு எந்திரங்கள் மீது சந்தேகம் வராமல் இருப்பது ஏன்?. வாக்கு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்றால் சட்டசபை தேர்தலில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் வெற்றி பெற்றிருக்க முடியுமா?.

இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.

Tags:    

Similar News