செய்திகள்
ரன்தீப்சிங் சுர்ஜிவாலா

பழிவாங்கும் அரசியலில் எடியூரப்பா அரசு ஈடுபடுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Published On 2020-11-08 01:42 GMT   |   Update On 2020-11-08 01:42 GMT
வினய்குல்கர்னி கைது விவகாரத்தில் பழிவாங்கும் அரசியலில் எடியூரப்பா அரசு ஈடுபடுவதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு :

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரியான வினய் குல்கர்னியை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பா.ஜனதா கட்சியை சேர்ந்த யோகேஷ் கவுடா கொலை வழக்கில், அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

வினய் குல்கர்னி கைது நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

சி.பி.ஐ., அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை பா.ஜனதா அரசின் கைப்பாவையாக மாற்றி வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மந்திரி வினய்குல்கர்னியை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் பழிவாங்கும் அரசியலில் எடியூரப்பா தலைமையிலான அரசு ஈடுபடுகிறது. காங்கிரஸ் தலைவர்கள், இதுபோன்ற மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டார்கள். இதனை முதல்-மந்திரி எடியூரப்பா தெரிந்துக்கொள்ள வேண்டும்.

எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு, சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலமாக ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உள்பட காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. மக்களுக்காக காங்கிரஸ் போராடி வருகிறது. பா.ஜனதா அரசின் இந்த நடவடிக்கை காங்கிரசை இன்னும் பலப்படுத்தும் என்பதை நினைவுபடுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News