செய்திகள்
கோப்புப்படம்

அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் 10-ந்தேதி முதல் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது

Published On 2020-11-06 00:39 GMT   |   Update On 2020-11-06 00:39 GMT
மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் கண்காட்சிகள் 10-ந்தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டு இருந்த பொது முடக்கம் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் அறிவிக்கப்பட்டு வரும் தளர்வுகளின் அடிப்படையில் மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. இந்த வரிசையில் மத்திய அரசின் அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், கண்காட்சிகள் போன்றவற்றை வருகிற 10-ந்தேதி முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய கலாசார அமைச்சகம் நேற்று வெளியிட்டு உள்ளது. அத்துடன் இவற்றுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இது குறித்து கலாசாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் கண்காட்சிகள் 10-ந்தேதி முதல் திறக்கப்படும். மற்றவை வசதிக்கேற்பவும், தொடர்புடைய மாநிலம், நகரம், உள்ளூர் சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்பவும், நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றியும் திறக்கலாம்.

இவற்றுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளாக, அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் கண்காட்சிகள் போன்றவற்றின் வளாகங்கள், சுற்றுப்புறங்கள் அனைத்தும் சீரான இடைவெளியில் சுத்தப்படுத்த வேண்டும். பார்வையாளர்கள் அனைவரும் முககவசம் அணிவது கட்டாயம்.

ஒவ்வொரு பயன்பாட்டுக்கு பின்னரும் சுத்தம் செய்ய முடியாத ஆடியோ வழிகாட்டிகளை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இதைப்போல ஒவ்வொரு பயன்பாட்டுக்கு பின்னரும் சுத்தப்படுத்த முடியாத தொடுதல் அடிப்படையிலான டிஜிட்டல் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவதை குறைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மின்தூக்கி (லிப்ட்) பயன்பாடுகள் குறைக்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு மட்டுமே இவற்றை பயன்படுத்தலாம்.

இவ்வாறு கலாசார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News