செய்திகள்
கோப்புப்படம்

கோவேக்சின் தடுப்பூசி பிப்ரவரியில் வந்து விடும் - மத்திய அரசு விஞ்ஞானி ரஜினிகாந்த் தகவல்

Published On 2020-11-05 22:15 GMT   |   Update On 2020-11-05 22:15 GMT
கொரோனாவை தடுக்க கோவேக்சின் தடுப்பூசி பிப்ரவரி மாதம் வந்து விடும் என எதிர்பார்ப்பதாக மத்திய அரசு விஞ்ஞானி ரஜினிகாந்த் தெரிவித்தார்.
புதுடெல்லி:

கொரோனா வைரசை தடுத்து நிறுத்துவதற்காக இந்தியாவில் முதன்முதலாக ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தார், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ஐ.சி.எம்.ஆர்.) சேர்ந்து கோவேக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர்.

இந்த தடுப்பூசி, மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனையில் இருந்து வருகிறது. ஆரம்ப கட்ட சோதனைகளில் பாதுகாப்பானது என தெரியவந்துள்ள இந்த தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இது தொடர்பாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானி ரஜினிகாந்த் நேற்று கூறியதாவது:-

கோவேக்சின் தடுப்பூசியை பொறுத்தமட்டில் அது நல்ல செயல்திறனைக் காட்டி இருக்கிறது. இந்த தடுப்பூசி, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது பிப்ரவரி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம்.

கோவேக்சின் தடுப்பூசியை அதன் இறுதிக்கட்ட சோதனையை முடிக்கும் முன்னதாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க முடியுமா என்பதை மத்திய சுகாதார அமைச்சகம்தான் முடிவு செய்ய வேண்டும்.

அதே நேரத்தில் இந்த தடுப்பூசி முதல் இரு கட்ட மருத்துவ பரிசோதனையில் நல்ல பாதுகாப்பு மற்றும் செயல்திறனை காட்டி இருக்கிறது. எனவே இது பாதுகாப்பானது. அதே நேரத்தில் 3-வது இறுதிக்கட்ட பரிசோதனை முடியும் முன்பாக அது 100 சதவீதம் பாதுகாப்பானது என்று உறுதி அளிக்க முடியாது.

கொஞ்சம் ஆபத்து இருக்கலாம். நீங்கள் அந்த இடர்ப்பாட்டை சந்திக்க தயார் என்றால், இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால், அவசர சூழ்நிலையில் தடுப்பூசியை பயன்படுத்துவதுபற்றி அரசாங்கம் முடிவு எடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கியுள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும் இந்தியாவில் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. இந்த தடுப்பூசியை டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விட முடியும் என இங்கிலாந்து எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News