செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு

கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2020-11-05 20:09 GMT   |   Update On 2020-11-05 20:09 GMT
மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்களில் கொரோனா கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி:

மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்களில் கொரோனா கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பயன்பாட்டிற்கு தடை குறித்த உரிய உத்தரவுகளை பிறப்பிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்களில், மக்கள் உள் நுழைந்து வெளிவரும் வகையில் சுரங்க வளைவுகள் அமைத்து அதன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீர்மானித்திருந்தது.

தீமை விளைவிக்கும் இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று, பஞ்சாபை சேர்ந்த குர்சிம்ரன் சிங் நரூலா பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன்பு இதன் மீதான விசாரணை நடைபெற்றது.

விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “கொரோனா கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பயன்பாடு மருத்துவரீதியாகவும், மனோதத்துவ ரீதியாகவும் தீங்கை விளைவிக்கும்...கொரோனா கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பயன்பாட்டை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என வாதிட்டார்.

“கொரோனா கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பயன்பாடு மருத்துவரீதியாகவும், மனோதத்துவ ரீதியாகவும் தீங்கை விளைவிக்கும் என்றால் ஏன் அதைத் தடை செய்யவில்லை?” மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

“கொரோனா கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பயன்பாட்டை தடுக்க உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்” என மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறியது,

“கொரோனா கிருமி நாசினி, புகை தெளிக்கும் சுரங்கப் பயன்பாடு தடை குறித்த உரிய உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும். மேலும் செயற்கை புறஊதா கதிர் வீச்சு பயன்பாட்டுக்கும் தடை குறித்த உரிய உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும். மக்களின் நலன் கருதி இந்த உத்தரவுகளை ஒரு மாதத்திற்குள் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்” என தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News