செய்திகள்
மந்திரி சுரேஷ்குமார்

கர்நாடகத்தில் பள்ளிகளை உடனே திறக்கும் திட்டம் இல்லை: மந்திரி சுரேஷ்குமார்

Published On 2020-11-05 02:19 GMT   |   Update On 2020-11-05 02:19 GMT
குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் நலன் முக்கியம் என்பதால் பள்ளிகளை உடனே திறக்கும் திட்டம் இல்லை என்று மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
பெங்களூரு :

கொரோனா பரவல் காரணமாக கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாநிலத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில் கல்லூரிகள் வருகிற 17-ந் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார், நேற்று கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிகளை திறப்பது குறித்து பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். இதில் முதல் கட்டமாக 8-ம் வகுப்பு முதல் பி.யூ.கல்லூரி வரை வகுப்புகளை தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து சுரேஷ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குழந்தைகளின் உடல் நலனே முக்கியம். ஆயினும் நீண்ட காலம் அவர்கள் கல்வி கற்காமல் இருப்பதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஆலோசிக்க வேண்டியுள்ளது. குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் நலன் முக்கியம் என்பதால் பள்ளிகளை உடனே திறக்கும் திட்டம் இல்லை. பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகளை திறப்பது குறித்து பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனைகள் கேட்கப்பட்டுள்ளன. பிற மாநிலங்களில் கற்றல் எப்படி உள்ளது, அதனால் ஏற்பட்டுள்ள பயன் மற்றும் சிக்கல்கள் குறித்தும் இன்று (நேற்று) நடைபெற்ற கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கல்வித்துறை கமிஷனர், பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பள்ளிகளை திறப்பது குறித்து 2 நாட்களில் ஒரு அறிக்கையை தயார் செய்வார். அந்த அறிக்கை முதல்-மந்திரியிடம் தாக்கல் செய்யப்படும். அதன் பிறகே பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கப்பட்ட பிறகு ஆசிரியர்கள் பணி இடமாறுதல் கலந்தாய்வு தொடங்கப்படும். அதே போல் பி.யூ.கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் பணி இடமாறுதலுக்கும் அனுமதி வழங்கப்படும்.

இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.
Tags:    

Similar News