செய்திகள்
கோப்புப்படம்

பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கலாமா? தமிழகம் உள்பட 18 மாநிலங்கள் பதில் அளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

Published On 2020-11-04 23:49 GMT   |   Update On 2020-11-04 23:49 GMT
18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கலாமா என்பது குறித்து பதில் அளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி:

கொரோனா காலத்தில் காற்றின் தரம் மோசமாக இருப்பதால் தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க கோரும் வழக்கை டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. வருகிற 7-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கலாமா என்பது குறித்து பதில் அளிக்க ஏற்கனவே டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு காற்று மாசு தொடர்பான இந்த வழக்கு விசாரணையை விரிவுபடுத்தி உள்ளது. காற்றின் மாசு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கும் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கலாமா என்பது குறித்து பதில் அளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. இதன்படி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மராட்டியம், குஜராத், அசாம், பீகார், சண்டிகர், சத்தீஷ்கார், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மேகாலயா, நாகலாந்து, உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் பதில் அளிக்க வேண்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

திருச்சி, தூத்துக்குடி ஆகிய இரு மாநகரங்களில் காற்று மாசு அதிகம் உள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை தொடர்ந்து, தமிழக அரசுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநில அரசுகள் தீபாவளியின் போது பட்டாசு வெடிக்க தடை விதித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News