செய்திகள்
விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகள் வழக்கு

விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகள் வழக்கு: பெங்களூருவில் ஒரே வாரத்தில் ரூ.3.81 கோடி அபராதம் வசூல்

Published On 2020-11-04 01:39 GMT   |   Update On 2020-11-04 01:39 GMT
பெங்களூருவில், போக்குவரத்து விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகள் மீது 90 ஆயிரம் வழக்குகளை பதிவு செய்த போக்குவரத்து போலீசார், ஒரே வாரத்தில் ரூ.3.81 கோடி அபராதம் வசூலித்து உள்ளனர்.
பெங்களூரு :

பெங்களூருவில் கடந்த 2018-ம் ஆண்டை காட்டிலும் கடந்த ஆண்டு(2019) சாலை விபத்துகள் அதிகரித்து உள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி செல்வதை காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்வதுடன், அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரே வாரத்தில் ரூ.4 கோடி வரை வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம்(அக்டோபர்) 25-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை 7 நாட்களில், பெங்களூருவில் விதிகளை மீறி வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து போக்குவரத்து போலீசார் ரூ.3.81 கோடி அபராதம் வசூலித்து உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

பெங்களூரு நகரில் அனைத்து இடங்களிலும் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஆபத்து ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியது, வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டியது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது, தவறான இடத்தில் வாகனங்களை நிறுத்தியது, ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கியது, சிக்னலில் நிற்காமல் சென்றது, இடதுபுறமாக வாகனங்களை முந்தி சென்றது, ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்தது, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியது, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியது உள்பட பல்வேறு விதத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 7 நாட்களில் 89 ஆயிரத்து 957 வழக்குகள் பதிவாகி உள்ளன. வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.3 கோடியே 81 லட்சத்து 44 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News