செய்திகள்
கோப்புப்படம்

இந்த மாதத்தில் பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் 3 தடவை சந்திக்க ஏற்பாடு?

Published On 2020-11-02 22:31 GMT   |   Update On 2020-11-02 22:31 GMT
பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இந்த மாதத்தில் மட்டும் காணொலி காட்சி மூலமாக 3 தடவை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:


பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் கடந்த 6 ஆண்டுகளில் 18 தடவை நேரில் சந்தித்துள்ளனர். பிரதமர் மோடி, சீனாவில் சியான், சியாமென், உகான் ஆகிய நகரங்களில் ஜின்பிங்கை சந்தித்து பேசியுள்ளார்.

அதுபோல், ஜின்பிங் இந்தியாவுக்கு வந்து ஆமதாபாத், மாமல்லபுரம் ஆகிய நகரங்களில் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்புகளுக்கு பிறகு, கிழக்கு லடாக்கில் சீன படைகளின் அத்துமீறல் முயற்சியால், இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது.

இந்த பரபரப்புக்கு இடையே, பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இம்மாதத்தில் மட்டும் 3 தடவை காணொலி காட்சி மூலம் சந்தித்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில், வருகிற 10-ந் தேதி, காணொலி காட்சி மூலம் ரஷியா நடத்தும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடக்கிறது. அதில், இருவரும் சந்திப்பார்கள் என்று தெரிகிறது.

இரண்டாவதாக, வருகிற 17-ந் தேதி, காணொலி காட்சி மூலம் ரஷியா நடத்தும் ‘பிரிக்ஸ்’ மாநாடு நடக்கிறது. அதிலும் இருவரும் சந்தித்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவதாக, வருகிற 21 மற்றும் 22-ந் தேதிகளில், காணொலி காட்சி மூலம் சவுதி அரேபியா நடத்தும் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடக்கிறது. அதிலும், இரு தலைவர்களும் சந்திப்பார்கள் என்று தெரிகிறது. ஆனால், இந்த மாநாடுகள் குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இதுதவிர, வருகிற 13 முதல் 15-ந் தேதிவரை நடக்கும் இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். அத்துடன், இம்மாத இறுதியில் இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டை இந்தியா நடத்தும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News