செய்திகள்
வேட்பாளர் அம்மஜம்மா மயங்கி விழுந்த காட்சிகளை படங்களில் காணலாம்.

சிரா இடைத்தேர்தல் பிரசாரம்: மேடையில் மயங்கி விழுந்த மதச்சார்பற்ற ஜனதா தள பெண் வேட்பாளர்

Published On 2020-11-02 01:49 GMT   |   Update On 2020-11-02 01:49 GMT
சிராவில் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் மேடையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு உண்டானது.
துமகூரு :

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள பெங்களூரு ஆர்.ஆர்.நகர், துமகூரு மாவட்டம் சிரா தொகுதிகளுக்கு நாளை(செவ்வாய்க்கிழமை) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர்.

நேற்றுடன் பகிரங்க பிரசாரம் ஓய்ந்தது. இந்த நிலையில் சிரா தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அம்மஜம்மாவை ஆதரித்து நேற்று ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா, அவரது மகனும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி ஆகியோர் பிரசாரம் செய்தனர்.

அப்போது மேடையில் அமர்ந்து இருந்த வேட்பாளர் அம்மஜம்மா திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். அவரை மேடையில் இருந்தவர்கள் தாங்கி பிடித்தனர். இதனால் தேவேகவுடா, குமாரசாமி ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அம்மஜம்மாவை மீட்டு ஜனதாதளம்(எஸ்) கட்சி தொண்டர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மயக்கம் தெளிந்து மீண்டும் பிரசாரம் நடந்த மேடைக்கு வந்தார்.

பின்னர் மேடையில் பேசிய அம்மஜம்மா, “எனக்கு ஒன்றும் இல்லை. கடவுள் ஆசியால் நல்ல நிலையில் உள்ளேன்” என்று கூறினார். அம்மஜம்மா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்பாளர், மேடையில் மயங்கி விழுந்தது தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News