செய்திகள்
கோப்புப்படம்

டிக்கெட் உறுதி செய்யப்படாததால் 1¼ கோடி பேர் ரெயில்களில் பயணிக்க முடியவில்லை

Published On 2020-11-01 19:15 GMT   |   Update On 2020-11-01 19:15 GMT
கடந்த நிதியாண்டில், காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகள் உறுதி ஆகாததால், 1¼ கோடி பேர், ரெயில்களில் பயணிக்க முடியாமல் போய்விட்டதாக தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி:

மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி, ரெயில்வேயிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தார். கடந்த நிதியாண்டில் (2019-2020), காத்திருப்போர் பட்டியல் விவரம் குறித்து அவர் கேட்டிருந்தார்.

அதற்கு ரெயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது. அதன்படி, கடந்த நிதியாண்டில், 1 கோடியே 25 லட்சம் பயணிகளின் காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகள் கடைசி வரை உறுதி செய்யப்படாததால், அவர்களது டிக்கெட்டுகள் தானாகவே ரத்தானது. இதனால், அவர்கள் ரெயில்களில் பயணம் செய்ய முடியவில்லை.

அதுமட்டுமின்றி, கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 5 கோடி பி.என்.ஆர். எண்கள் கடைசிவரை உறுதி செய்யப்படாமல் ரத்தானதாகவும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் மேலும் கூறியதாவது:-நெரிசல் மிகுந்த வழித்தடங்களில், ரெயில்கள் பற்றாக்குறையாக இருப்பதையே இது காட்டுகிறது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களின் தேவையை ரெயில்வேயால் பூர்த்தி செய்ய முடியவில்லை.

முடிந்த அளவுக்கு காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கையை குறைப்பதற்காக, தனியார் ரெயில்களை அறிமுகம் செய்துள்ளோம். நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் ‘குளோன் ரெயில்’ என்ற பெயரில் கூடுதல் ரெயில்கள் இயக் கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News