செய்திகள்
தேவகவுடா

சிரா தொகுதியை தத்தெடுக்க முடிவு செய்துள்ளேன்: தேவகவுடா

Published On 2020-11-01 02:13 GMT   |   Update On 2020-11-01 02:13 GMT
வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காக சிரா தொகுதியை தத்தெடுக்க முடிவு செய்துள்ளேன் என்று தேவகவுடா தெரிவித்துள்ளார்.
துமகூரு

துமகூரு மாவட்டம் சிரா தொகுதியின் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்த சத்ய நாராயணா சமீபத்தில் மரணம் அடைந்தார். அதன் காரணமாக அந்த தொகுதிக்கு வருகிற 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அந்த தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளரை ஆதரித்து நேற்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

சிரா அருகே பட்டநாயக்கனஹள்ளியில் நடந்த பிரசார கூட்டத்தின் போது தேவகவுடா பேசியதாவது:-

சிரா தொகுதி எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். இந்த தொகுதி ஜனதாதளம்(எஸ்) கட்சியின் கோட்டையாக விளங்குகிறது. சிரா தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடும் தொண்டர்களே அதிகமாக உள்ளனர். கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் யாரும் கிடையாது. சிரா தொகுதியின் வளர்ச்சிக்காக, இந்த தொகுதியை தத்தெடுக்க முடிவு செய்திருக்கிறேன். ஜனதாதளம்(எஸ்) கட்சியின் கோட்டையாக விளங்கும் சிரா தொகுதியை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும். இங்கு நாம் வெற்றி பெற்றே தீர வேண்டும்.

இந்த தொகுதியில் சத்ய நாராயணா 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு காரணமாகி, இந்த தொகுதி மக்கள் நமக்கு புதிய சக்தியை கொடுத்துள்ளனர். இந்த தொகுதி வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எனது முழு நோக்கம். அதனால் தான் இந்த தொகுதியை தத்தெடுக்க முடிவு செய்திருக்கிறேன்.

நான் டெல்லி மேல்-சபை எம்.பி.யாக இருந்து வருகிறேன். எனக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடி நிதி உதவி வழங்கப்படும். அந்த ரூ.2 கோடியையும் சிரா தொகுதியின் வளர்ச்சிக்காக செலவு செய்ய முடிவு செய்துள்ளேன். சிரா தொகுதி இடைத்தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி வெற்றி பெறுவது உறுதி.

இந்த தொகுதி மக்கள் ஜனதாதளம்(எஸ்) கட்சியை ஆதரிக்க தயாராகி விட்டனர். காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு இந்த தொகுதி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். சிரா தொகுதியை முன் மாதிரியாக மாற்றி காட்ட நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News