செய்திகள்
கோப்புப்படம்

மத்திய வேளாண் சட்டங்களுக்கு மாற்றாக 3 மசோதாக்கள் - ராஜஸ்தான் சட்டசபையில் காங்கிரஸ் அரசு தாக்கல்

Published On 2020-10-31 23:38 GMT   |   Update On 2020-10-31 23:38 GMT
மத்திய வேளாண் சட்டங்களுக்கு மாற்றாக ராஜஸ்தான் சட்டசபையில் காங்கிரஸ் அரசு 3 மசோதாக்களை தாக்கல் செய்துள்ளது.
ஜெய்ப்பூர்:

மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

ஆனால் இந்த சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானவை என்ற கருத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திக் கூறி வருகின்றன. இந்த சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

ஆனால் மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும், இடைத்தரகர்களின் பிடியில் இருந்து விவசாயிகளை விடுவிக்கும், விவசாயத்தில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தும் என்று கூறுகிறது.

பா.ஜ.க. அரசின் இந்த சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் புதிய சட்டங்கள் இயற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியாகாந்தி அறிவுறுத்தினார்.

அதன் அடிப்படையில் இந்த மாத தொடக்கத்தில் பஞ்சாப் மாநில சட்டசபையில் மத்திய அரசின் 3 வேளாண்மை சட்டங்களுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை அமரிந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது. மேலும் 3 வேளாண் மசோதாக்களையும் கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளது.

அந்த வரிசையில் தனது மாநிலத்திலும் வேளாண் விரோத சட்டங்களை புறந்தள்ளும் விதத்தில் பஞ்சாப் மாநிலத்தை போன்று சட்டங்கள் கொண்டு வரப்படும் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி அசோக் கெலாட் அறிவித்தார்.

அதன்படி, ராஜஸ்தான் மாநில சட்டசபை நேற்று கூடியபோது, சட்டமன்ற விவகாரங்கள் துறை மந்திரி சாந்தி தாரிவால், மத்திய வேளாண் சட்டங்களுக்கு மாற்றாக 3 வேளாண் சட்ட மசோதாக்களை தாக்கல் செய்தார்.

அந்த மசோதாக்கள் அத்தியாவசிய பொருட்கள் (சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் ராஜஸ்தான் திருத்தம்) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரம் வழங்கல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் (ராஜஸ்தான் திருத்தம்) மசோதா 2020, விவசாயிகள் உற்பத்திப்பொருட்கள் வர்த்தகம் (ஊக்குவிப்பு, வசதி மற்றும் ராஜஸ்தான் திருத்தம்) மசோதா 2020 ஆகும்.

கூட்டத்தொடரின் முதல்நாள் என்பதால், மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
Tags:    

Similar News