செய்திகள்
எடியூரப்பா

சிரா தொகுதியில் 60 ஏரிகளை நிரப்ப நடவடிக்கை: இடைத்தேர்தல் பிரசாரத்தில் எடியூரப்பா பேச்சு

Published On 2020-10-31 02:11 GMT   |   Update On 2020-10-31 02:11 GMT
சிரா தொகுதியில் 60 ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சிரா, ஆர்.ஆர்.நகர் ஆகிய 2 தொகுதிகளுக்கு வருகிற 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பகிரங்க பிரசாரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது. இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா சிரா தொகுதியில் நேற்று பா.ஜனதா வேட்பாளர் ராஜேஸ்கவுடாவை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அங்கு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-

இன்னும் 2 ஆண்டுகளில் கர்நாடகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்றுவேன். அனைத்து தரப்பு மக்களும் முன்னேற்றம் அடைய வேண்டும். கொரோனா வைரஸ் காரணமாக மாநில அரசின் பொருளாதார நிலை சற்று மோசமாகியுள்ளது. தற்போது நிதிநிலை சீராகி வருகிறது. சிராவை மாதிரி தாலுகாவாக மாற்றுவேன். இங்கு நடைபெற வேண்டிய அனைத்து பணிகளையும் இடைத்தேர்தலுக்கு பிறகு செய்து கொடுப்பேன்.

இங்கு சாதி பிரச்சினை இல்லை. அனைத்து சாதியினரும் நிம்மதியாக வாழ வேண்டும்.

பா.ஜனதா வேட்பாளரை 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். ஹேமாவதி அணையில் இருந்து நீரை எடுத்து சிரா தொகுதியில் 60 ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தொகுதியில் பா.ஜனதா வெற்றியை காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) உள்பட எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

அக்கட்சிகள் 2-வது இடத்திற்கு தான் போட்டி போடுகின்றன. காடுகொல்லர் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு நான் முன்பு நிதி ஒதுக்கீடு செய்தேன். இதற்கு முன்பு கே.ஆர்.பேட்டையில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிப்படி அங்கு வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். ஏற்கனவே சிரா மற்றும் கல்லம்பெள்ள ஏரிகளுக்கு தண்ணீரை கொடுத்து வருகிறோம்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
Tags:    

Similar News