செய்திகள்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

இந்திய பொருளாதாரம் மீண்டு வருகிறது - மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்

Published On 2020-10-28 22:19 GMT   |   Update On 2020-10-28 22:19 GMT
இந்திய பொருளாதாரம் சுருங்கிய நிலையில் இருந்து மீண்டு வருவதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
புதுடெல்லி:

நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவரலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பொருளாதாரம் சரிவு நிலையில் இருந்து மீள்வதற்கான முழுவீச்சில், தொழில், வர்த்தக நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த தருணத்தில் டெல்லியில் இந்திய எரிசக்தி பேரவையின் ‘செராவீக்’ வருடாந்திர எரிசக்தி மாநாடு நேற்று நடந்தது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டில் விவசாயத்துறையில் உபரியாக உள்ள தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதிக்கு தயாராக இருப்பதை உறுதி செய்வதற்கு உள்கட்டமைப்பு செலவுகளை செய்வது அரசின் முன்னுரிமைகளில் முதல் இடத்தில் உள்ளது.

இதற்காக ஏராளமான நிதியை நாங்கள் ஈர்க்கிறோம்.

வேளாண் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக துறைமுகங்களுக்கான இணைப்பை ஏற்படுத்தவும், பதப்படுத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பை ஏற்படுத்தவும், குளிர்பதன வசதியை ஏற்படுத்தவும்தான் உள்கட்டமைப்பு முதலீடுகளை செய்கிறோம்.

அரசு வேளாண் துறை சீர்திருத்தங்களை தொடங்கி உள்ளது. இந்த துறையின் ஏற்றுமதி திறனை பயன்படுத்துவதற்காக வேளாண் ஏற்றுமதி கொள்கைகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

பல மாதங்களாக சுருங்கி வந்த இந்திய பொருளாதாரத்தின் நிலை இப்போது மீண்டு வருகிறது.

கொரோனா கால கட்டுப்பாடுகள் தளர்வு, பொருளாதார நடவடிக்கைகள் வேகத்தை எட்டி உள்ளன. நான்காவது காலாண்டில் ஒரு நிலையான மீட்புக்கு அது வழிநடத்தும்.

வேளாண்மை மற்றும் கிராமப்புறம், அதன் தொடர்புடைய பிற துறைகள் மிகச்சிறப்பாக செயல்படுவதாக குறிகாட்டிகள் காட்டுகின்றன. வீட்டு பயன்பாட்டு சாதனங்கள், விவசாய சாதனங்கள், டிராக்டர்கள், வாகனங்கள் ஆகியவற்றின் தேவை பெருகி வருகிறது.

பண்டிகைக்காலம் தொடங்கி உள்ளது. அதன் விளைவாக தேவைகள் பெருகும். அது ஸ்திரமானதாகவும், நிலையானதாகவும் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News