செய்திகள்
மத்திய அரசு

வட்டிக்கு வட்டி தள்ளுபடி : கடன்தாரர்களுக்கு சலுகை தொகையை 5-ந் தேதிக்குள் வழங்க மத்திய அரசு உத்தரவு

Published On 2020-10-27 23:23 GMT   |   Update On 2020-10-27 23:23 GMT
ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு மத்திய அரசு வட்டி சலுகையை அறிவித்துள்ளது. இதை கடன்தாரர்களுக்கு நவம்பர் 5-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக நாடு போராடிக்கொண்டிருப்பதால் வங்கிகளில் பொதுமக்கள் வாங்கிய கடன்களுக்கான தவணைகளை 6 மாதங்களுக்கு ரிசர்வ் வங்கி ஒத்திவைத்தது. ஆனால் ரிசர்வ் வங்கியின் இந்த சலுகையை பயன்படுத்தியவர்களுக்கு தவணையை செலுத்தாத 6 மாதங்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் என வங்கிகள் தெரிவித்தன. இதில் அதிருப்தி அடைந்த பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடுத்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.எஸ்.ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது. வட்டிக்கு வட்டி விதிக்கும் செயலுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்ததை அடுத்து ரூ.2 கோடி வரையில் கடன் வாங்கியவர்களுக்கு மார்ச் முதல் ஆகஸ்டு வரையிலான 6 மாத காலத்துக்கு வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரமும் தாக்கல் செய்தது. இந்த சலுகையை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

அதைத் தொடர்ந்து வட்டிக்கு வட்டி இல்லை என்ற சலுகை திட்டம் குறித்து மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பை கடந்த 24-ந் தேதி இரவு வெளியிட்டது.

இது வட்டிக்கு வட்டி செலுத்தி வேதனையில் மூழ்கி இருந்த கடன்தாரர்களுக்கு தீபாவளி பண்டிகை சலுகையாக அமைந்தது. அவர்களை நிம்மதிப்பெருமூச்சு விடவும் வைத்தது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

வட்டிக்கு வட்டி தள்ளுபடி திட்டத்தின்கீழ், அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்களும் (வங்கிகளும்) மார்ச் 1-ந் தொடங்கி ஆகஸ்டு 31-ந் தேதி வரையிலான கால கட்டத்தில் தகுதி வாய்ந்த கடன்தாரர்களுக்கு, கடனுக்கான கூட்டு வட்டி மற்றும் சாதாரண வட்டிக்கு இடையேயான வித்தியாசத்தை கழித்து கணக்கில் வரவு வைக்க வேண்டும்.

அனைத்து வங்கிகளும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதுடன், நவம்பர் மாதம் 5-ந் தேதிக்குள் கடன்தாரர்களின் கணக்குகளில், சலுகை திட்டத்தின்கீழ் கணக்கிடப்பட்ட தொகையை வரவு வைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

அத்தகைய கடன்தாரர்கள், வட்டி சலுகையை முழுமையாக பெற்றிருக்கிறார்களா அல்லது ஓரளவுக்கு பெற்றிருக்கிறார்களா அல்லது சலுகைகளை பெறவில்லையா என்பதை கருத்தில் கொள்ளாமல், கடன் வழங்கும் நிறுவனங்களால் இந்த தொகை வரவு வைக்கப்படும்.

தகுதியுள்ள கடன்தாரர்களின் கணக்கில் இந்த தொகையை வரவு வைத்த பிறகு, இந்த தொகையை திருப்பி செலுத்துமாறு மத்திய அரசை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.), மூலமாக வங்கிகள் கேட்க வேண்டும்.

கவனமாக பரிசீலித்த பின்னர் ஒட்டுமொத்த பொருளாதார சூழ்நிலை, கடன்தாரர்களின் தன்மை, பொருளாதாரத்தின் மீதான தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கடன்தாரர்கள் நன்மைக்காக இந்த கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News