செய்திகள்
கொரோனா வைரஸ்

கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைகிறது- தொற்று நோயியல் நிபுணர் பேட்டி

Published On 2020-10-27 14:32 GMT   |   Update On 2020-10-27 14:32 GMT
கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைகிறது என்று தொற்று நோயியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:

இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றி வரும் தொற்றுநோயியல் நிபுணரும், மாநில அரசின் கொரோனா தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனை குழு உறுப்பினருமான கிரிதரபாபு பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. இது தற்போது வெகுவாக அதாவது 5 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இது, மக்கள் அடர்த்தி உள்ள இடங்களில் இருந்து கொரோனா பரவல் வேறு பகுதிகளுக்கு இடம் மாறுவதை காட்டுகிறது. பிற பகுதிகளில் மக்கள் அடர்த்தி குறைவாக இருக்கலாம். நாட்டின் மற்ற பகுதிகளில் குறைந்துள்ளது போல் கர்நாடகத்திலும் கொரோனா பரவல் குறைந்துள்ளது. கொரோனா பலி விகிதமும் குறைந்து வருகிறது. அடுத்த கொரோனா பரவல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இவ்வாறு கிரிதரபாபு கூறினார்.

கர்நாடக கொரோனா நிர்வாக போர் அலுவலக தலைவர் முனிஸ் மவுத்கில் கூறுகையில், “கர்நாடகத்தில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்த காரணத்தால் கொரோனா பரவல் குறைந்துள்ளது. கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால் அதன் பரவல் என்பது குறைந்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ளது. அதிக பரிசோதனைகள் கொரோனா பரவலை குறைத்துள்ளது என்பதற்கு கர்நாடகம் பின்பற்றிய மாதிரி நடவடிக்கை வெற்றியாக அமைந்துள்ளது“ என்றார்.

கர்நாடக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. பெங்களூருவில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான கே.ஆர்.மார்க்கெட், கலாசிபாளையா, மெஜஸ்டிக், காந்தி பஜார், குமாரசாமி லே-அவுட், பசனசங்கரி, பி.டி.ஏ. வணிக வளாகங்கள், வணிக வளாகங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நாங்கள் கொரோனாவுக்கு எதிராக நேரடியாக போராடுகிறோம். தேவையான முன்எச்சரிக்கையுடன் சளி மாதிரிகளை சேகரிக்கிறோம். நகரின் மூலை முடுக்குகளில் எல்லாம் கொரோனா பரிசோதனை முகாம்களை நடத்துகிறோம். மருத்துவ பணியாளர்கள், உண்மையிலேயே கொரோனா முன்கள போராளிகளாக மாறியுள்ளனர்“ என்றார்.
Tags:    

Similar News