செய்திகள்
கோப்பு படம்

கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30-வரை ஊரடங்கு நீட்டிப்பு - உள்துறை அமைச்சகம் உத்தரவு

Published On 2020-10-27 11:10 GMT   |   Update On 2020-10-27 11:10 GMT
கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30-வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.

தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 5.0 அமலில் உள்ளது. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31 ஆம் தேதி சனிக்கிழமையுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், ஊரடங்கு தளர்வு 6.0 தொடர்பான புதிய உத்தரவுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

ஊரடங்கு தளர்வு 5.0-வில் என்னென்ன தளர்வுகள் அமலில் இருந்ததோ அவை 6.0-விலும் அப்படியே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மெட்ரோ ரெயில் சேவை, கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி, திரையரங்குகள் செயல்பட அனுமதி, பள்ளிகள் திறப்பு, உணவகங்கள் செயல்பட அனுமதி போன்ற ஊரடங்கு தளர்வு 5.0-வில் அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால், கண்டெய்ன்மெண்ட் சோன் எனப்படும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் மக்கள், வாகனங்கள் சென்றுவர எந்த வித இ-பாஸ் அல்லது அனுமதி தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News