செய்திகள்
பிரதமர் மோடி

இந்தியாவின் எரிசக்தி பயன்பாடு இரட்டிப்பாக உயரும் - பிரதமர் மோடி கணிப்பு

Published On 2020-10-26 23:33 GMT   |   Update On 2020-10-26 23:33 GMT
வருங்காலத்தில் இந்தியாவின் எரிசக்தி பயன்பாடு இரட்டிப்பாகும் என்று பிரதமர் மோடி கணித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்திய எரிசக்தி கூட்டமைப்பு மாநாடு நேற்று நடைபெற்றது. அதில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பேசினார்.

அவர் பேசியதாவது:-

கொரோனா பரவல் காரணமாக, உலகளாவிய எரிசக்தி தேவை, மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது. முதலீட்டு முடிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அடுத்த சில ஆண்டுகளிலும் எரிசக்தி தேவை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வருங்காலத்தில் இந்தியாவின் எரிசக்தி பயன்பாடு இரட்டிப்பாகும் என்று தோன்றுகிறது. இதனால், இந்தியாவால் உலகளாவிய எரிசக்தி தேவை அதிகரிக்கும்.

இந்தியா தற்போது தூய்மையான, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை நாடி உள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 2022-ம் ஆண்டுக்குள் மின்உற்பத்தியை 175 ஜிகா வாட்டாக உயர்த்த இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. அதுபோல், 2030-ம் ஆண்டுக்குள் 450 ஜிகா வாட்டாக உயர்த்தப்போகிறோம்.

கார்பனை குறைவாக வெளியிடும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் எரிசக்தி துறையில் கடந்த 5 ஆண்டுகளில் புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு திறனை ஆண்டுக்கு 25 கோடி டன் என்ற நிலையில் இருந்து 2025-ம் ஆண்டுக்குள் 45 டன்னாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.

இதன்மூலம், தேவையை பூர்த்தி செய்து தற்சார்பு நிலையை அடைவோம்.

எரிசக்தி துறையில் இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது. நாடு முழுவதும் விலை பாகுபாடின்றி எரிவாயு கிடைக்கச் செய்வோம். எல்.இ.டி. விளக்குகள் பயன்பாடு மூலம் ரூ.24 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தி உள்ளோம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Tags:    

Similar News