செய்திகள்
பிரதாப் சாரங்கி - நிர்மலா சீதாராமன்

நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி - மத்திய இணைமந்திரி தகவல்

Published On 2020-10-26 13:40 GMT   |   Update On 2020-10-26 13:40 GMT
நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என ஆளும் பாஜக அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மத்திய இணைமந்திரி தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வர்:

பீகார் தேர்தலில் வெற்றிபெற்றால் மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. பாஜகவின் இந்த தேர்தல் அறிக்கைக்கு பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கொரோனா தடுப்பூசியை தேர்தலில் வாக்கு சேகரிக்கும் கருவியாக பாஜக பயன்படுத்துவதாக கண்டனங்களும் எழுந்துள்ளது.

இதற்கிடையில், தமிழ்நாடு, மத்தியபிரதேசம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் தங்கள் மாநில மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளன. 

அதேபோல் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் பலசோரி தொகுதிக்கு வரும் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக ஆளும் மத்திய பாஜக அரசில் மத்திய இணைமந்திரியாக உள்ள பிரதாப் சாரங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரசாரத்தின் போது கொரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதாப் சாரங்கியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சாரங்கி, ‘ இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்ற தகவலை பிரதமர் மோடி அறிவிப்பார். இதற்காக ஒரு நபருக்கு கொரோனா தடுப்பூசி போட சராசரியாக 500 ரூபாய் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது’ என்றார்.
Tags:    

Similar News