செய்திகள்
நிர்மலா சீதாராமன்

கொரோனா தடுப்பூசி இலவசம் என்ற வாக்குறுதி சரியானதுதான் - நிர்மலா சீதாராமன் சொல்கிறார்

Published On 2020-10-24 23:18 GMT   |   Update On 2020-10-24 23:18 GMT
கொரோனா தடுப்பூசி இலவசம் என்கிற பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி சரியானதுதான் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பீகாரில் வருகிற 28-ந் தேதி தொடங்கி 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி இந்த தேர்தலில் களம் காணும் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

அதில் பீகாரில் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவுக்கான தடுப்பூசி இலவசம் என்பதை தேர்தல் வாக்குறுதியாக கொடுப்பது அபத்தமானது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி இலவசம் என்கிற பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி சரியானதுதான் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் இதுபற்றி அவர் கூறுகையில், “இது ஒரு தேர்தல் அறிக்கையில் உள்ள அறிவிப்பு. ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போது என்ன செய்ய விரும்புகிறது என்பதை அதில் அறிவிக்க முடியும். அதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது சரியானதுதான்” என்றார்.
Tags:    

Similar News