செய்திகள்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தலைவர்கள்

பீகார் சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு

Published On 2020-10-21 06:47 GMT   |   Update On 2020-10-21 06:47 GMT
பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் லோக் ஜனசக்தி கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன.
பாட்னா:

243 தொகுதிகள் கொண்ட பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. அக்டோபர் 28ம்தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. அதன்பின்னர் நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேர்தல்களில் அடுத்தகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா இணைந்த கூட்டணிக்கும்,  ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி இணைந்த மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 

இதேபோல் ஆளும் என்டிஏ கூட்டணியில் இருந்து பிரிந்த லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடுகிறது. அதேசமயம் பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கிறது. கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் இன்று  தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. 



காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கட்சியின் மாநில பொறுப்பாளர் சக்திசின் கோகில் மற்றும் மூத்த தலைவர்கள் வெளியிட்டனர். லோக் ஜனசக்தி தேர்தல் அறிக்கையில் அக்கட்சியின் தலைவர் சிரக் பஸ்வான் வெளியிட்டார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, மின்சார கட்டண தள்ளுபடி மற்றும் நீர்ப்பாசன வசதிகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

பீகாரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பஞ்சாபில் செய்ததைப் போல தனியாக மாநில வேளாண் மசோதாக்களைக் கொண்டு வந்து, தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் வேளாண் சட்டங்களை நிராகரிப்போம் என மாநில பொறுப்பாளர் சக்திசின் கோகில் தெரிவித்தார்.

பீகார் மக்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் லோக் ஜனசக்தி தேர்தல் அறிக்கையில் பல அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாக சிரக் பஸ்வான் கூறினார்.
Tags:    

Similar News