செய்திகள்
காவலர் நினைவுச் சின்னத்தில் மோடி மரியாதை (கோப்பு படம்)

அனைத்து சூழ்நிலைகளிலும் சிறந்த சேவை... காவலர் வீரவணக்க நாளில் பிரதமர் மோடி பெருமிதம்

Published On 2020-10-21 03:41 GMT   |   Update On 2020-10-21 03:41 GMT
நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் இருந்து அனைத்து சூழ்நிலைகளிலும் காவலர்கள் சிறப்பான சேவை செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வகையில் இன்று வீர வணக்கநாளையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவலர் நினைவுச் சின்னங்களில் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. உயிர்த்தியாகம் செய்த காவலர்களுக்கு புகழாரம் சூட்டி சமூக வலைத்தலங்களில் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில், காவலர் வீரவணக்க நாளையொட்டி பிரதமர் மோடி, காவலர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:-

நாடு முழுவதிலும் உள்ள நமது  காவல்துறையினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிப்பதே காவலர் நினைவு நாள். கடமையின்போது உயிர்த்தியாகம் செய்த அனைத்து காவல்துறையினருக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம். அவர்களின் தியாகமும் சேவையும் எப்போதும் நினைவில் இருக்கும்.

நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் இருந்து, கொடூரமான குற்றங்களுக்கு தீர்வு காண்பது வரை, பேரழிவு காலத்தில் உதவி செய்வதிலிருந்து, கொரோனாவுக்கு எதிராக போராடுவது வரை, நமது காவல்துறையினர் எப்போதும் சிறப்பான சேவை செய்கின்றனர். குடிமக்களுக்கு உதவ எப்போதும் தயார் நிலையில் இருக்கும் காவல்துறையினர் குறித்து நாம் பெருமை கொள்வோம்.

இவ்வாறு பிரதமர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News