செய்திகள்
சிகாரிப்புராவில் நடந்த நிகழ்ச்சியில் ஒரு பெண்ணுக்கு எடியூரப்பா இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கியபோது எடுத்தபடம்.

கர்நாடகத்தில் வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டு மனை: எடியூரப்பா தகவல்

Published On 2020-10-21 02:09 GMT   |   Update On 2020-10-21 02:09 GMT
கர்நாடகத்தில் வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
சிவமொக்கா :

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்-மந்திரி எடியூரப்பா ஹெலிகாப்டர் மூலம் சிவமொக்காவுக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புராவில் நடந்த நிகழ்ச்சிகளில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்துகொண்டார். அப்போது, ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-

கர்நாடகத்தில் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கட்டி கொடுப்பதே அரசின் முதன்மை திட்டமாகும். வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. வீட்டு மனை பட்டா வாங்க அரசு அதிகாரிகளுக்கோ, இடைத்தரகர்களுக்கோ மக்கள் பணம் கொடுக்கக்கூடாது. யாராவது பணம் கேட்டால், அதுபற்றி கலெக்டரிடம் புகார் அளிக்க வேண்டும்.

இந்த முறை சிவமொக்கா மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ளது. விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிட்ட மக்காச்சோளம் நன்கு விளைச்சல் ஆகி உள்ளது. மக்காசோளத்தை பிரித்தெடுக்கும் எந்திரம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக சிகாரிப்புராவுக்கு ரூ.1.40 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், சிவமொக்கா எம்.பி. ராகவேந்திரா, மாவட்ட கலெக்டர் சிவக்குமார், போலீஸ் சூப்பிரண்டு சாந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News