செய்திகள்
குமாரசாமி

விதிகளை மீறுகிறவர்களுக்கு அபராதம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்: குமாரசாமி

Published On 2020-10-21 01:57 GMT   |   Update On 2020-10-21 01:57 GMT
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வருமானம் இன்றி தவித்து வந்த ஆட்டோ, வாடகை கார் டிரைவர்களிடம் அபராதம் வசூலிப்பது என்பது அரசின் ராட்சச மனநிலையை எடுத்துக் காட்டுவதாக உள்ளதாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு :

விதிகளை மீறுகிறவர்களுக்கு அபராதம் வசூலிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, பாதிக்கப்பட்ட ஆட்டோ, வாடகை கார் ஓட்டுனர்களுக்கு தலா ரூ.5,000 உதவித்தொகை வழங்குவதாக அரசு அறிவித்தது. ஆனால் அதை முழுமையாக அமல்படுத்தவில்லை. டிரைவர்களுக்கு அறிவித்த உதவித்தொகையை வழங்காத அரசு, இப்போது அவர்களிடம் அபராதத்தை வசூலிக்கிறது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வருமானம் இன்றி தவித்து வந்த ஆட்டோ, வாடகை கார் டிரைவர்களிடம் அபராதம் வசூலிப்பது என்பது அரசின் ராட்சச மனநிலையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

ஏழை மக்களின் சாபம் அரசை தாக்கும் முன்பு, விதிகளை மீறுகிறவர்களுக்கு அரசு இத்தகைய அபராதம் வசூலிப்பதை உடனே நிறுத்த வேண்டும். மனம் நொந்துபோய் உள்ளவர்களை மேலும் பாதிப்படைய செய்வது அரசுக்கு நல்லதல்ல. முகக்கவசம் அணிவது மற்றும் சாலைவிதிகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட்டுவிட்டு அபராதம் வசூலிப்பது சரியல்ல. அனைத்து ஆவணங்களை காட்டினாலும், ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கிறார்கள்.

அபராதம் வசூலிக்க அரசு இலக்கு நிர்ணயித்து இருப்பது சரியல்ல. ஆட்டோ, வாடகை கார் டிரைவர்கள் சரியான அளவில் பயணிகள் கிடைக்காமல் ஒரு நேர உணவுக்கே வழியில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். இத்தகைய நெருக்கடியான நேரத்தில் போலீசார் அபராதம் வசூலிப்பதை மந்திரமாக கொண்டு செயல்படுவது வெட்கக்கேடானது. அதனால் போலீசார் அபராதம் வசூலிப்பதை உடனே நிறுத்த வேண்டும். நெருக்கடியான இந்த நேரத்தில் அரசு மனிதநேயத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Tags:    

Similar News