செய்திகள்
கோப்புப்படம்

இடமாற்ற ஆணையின்படி ராணுவ தம்பதி வெவ்வேறு இடத்தில் பணியில் சேரவேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2020-10-21 00:37 GMT   |   Update On 2020-10-21 00:37 GMT
ராணுவத்தில் அதிகாரிகளாக பணியாற்றும் கணவன், மனைவி ராணுவ ஆணையின்படி, வெவ்வேறு இடத்தில் பணியில் சேர வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி:

ராணுவத்தில் ‘ஜேக்’ என்று அழைக்கப்படுகிற ‘ஜட்ஜ் அட்வகேட் ஜெனரல்’ பதவியை கர்னல் அந்தஸ்தில் வகிப்பவர் அமித் குமார். இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து அந்தமான் நிகோபாருக்கு மாற்றப்பட்டார்.

இதே பணியில் உள்ள இவரது மனைவி கர்னல் பதவி உயர்வுடன் பஞ்சாப் மாநிலம் பதிண்டாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கணவர், மனைவி வெவ்வேறு இடத்துக்கு மாற்றப்படுவதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்கள்.

இந்த வழக்கை நீதிபதிகள் ராஜீவ் சகாய் என்ட்லா, ஆஷா மேனன் அமர்வு விசாரணைக்கு ஏற்று, அமித் குமார் தம்பதியரை ஒரே இடத்தில் பணி அமர்த்துமாறு கோரும் விண்ணப்பத்தை 4 வார காலத்தில் பரிசீலிக்குமாறு ராணுவத்துக்கு கடந்த மாதம் 15-ந் தேதி உத்தரவிட்டது.

அத்துடன் அவர்களது இடமாற்ற உத்தரவும் அக்டோபர் 20-ந் தேதி வரை (நேற்று) நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் கோரிக்கையை பரிசீலித்த ராணுவ மேலிடம், இருவரையும் ஒரே இடத்தில் பணியில் அமர்த்த மறுத்து விட்டது.

எல்லைகளில் உள்ள நிலவரத்தை கருத்தில் கொண்டும், ராணுவத்தின் நலன்களை கருத்தில் கொண்டும், ராணுவத்தில் ‘ஜேக்’ பணியில் இவர்களை போன்ற மூத்த அதிகாரிகளின் பற்றாக்குறையை கவனத்தில் கொண்டும் அவர்களது கோரிக்கையை ஏற்க ராணுவம் மறுத்தது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஊடகத்தில் செய்தி வெளியானது.

இந்த நிலையில் அந்த வழக்கு நேற்று டெல்லி ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் தொடக்கத்திலேயே இந்த விவகாரத்தில் ஊடகத்துக்கு தகவல்களை கசிய விட்டதில் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். பிரச்சினை கோர்ட்டுக்கு வந்த பிறகு, அமித்குமார் ஊடகத்தை நாடிய நடத்தையை நாங்கள் பாராட்ட இயலாது என நீதிபதிகள் கூறினார்கள்.

அப்போது அமித்குமார் தம்பதியர் சார்பில் ஆஜரான வக்கீல், எல்லை நிலைமை, நிறுவன நலன் ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தி, கோர்ட்டை தவறாக வழிநடத்த ராணுவ மேலிடம் முயற்சிப்பதாக வாதிட்டார். மேலும் குழந்தைகளை அவர்களது பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கக்கூடாது என்ற கொள்கை, இவர்களது இடமாற்றத்தில் பரிசீலிக்கப்படவில்லை, மனைவியின் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

ஆனால், கணவன், மனைவி இருவரும் தங்கள் பணியிட மாற்ற உத்தரவின்படி, அதில் குறிப்பிட்டுள்ள வெவ்வேறு இடத்துக்கு 15 நாட்களுக்குள் செல்லுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

அவர்களது இட மாற்றத்துக்கு ராணுவம் உரிய காரணங்களை கூறி உள்ளதாகவும், பரிசீலிக்க வேண்டிய அனைத்து அம்சங்களும் பரிசீலிக்கப்பட்டிருப்பது அவர்களது இடமாற்ற உத்தரவில் தெளிவாக இருப்பதாகவும் நீதிபதிகள் கூறி விட்டனர்.
Tags:    

Similar News