செய்திகள்
அம்மாஜம்மா, டி.பி.ஜெயச்சந்திரா, ராஜேஷ் கவுடா

மும்முனை போட்டி நிலவும் சிரா தொகுதியில் தாமரை மலருமா?

Published On 2020-10-20 02:16 GMT   |   Update On 2020-10-20 02:16 GMT
மும்முனை போட்டி நிலவும் சிரா தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் அல்லது ஜனதாதளம்(எஸ்) கட்சி வெற்றி பெறுமா? அல்லது 20 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு தாமரை மலருமா என்பது தெரியும்.
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் (ஆர்.ஆர்.நகர்), துமகூரு மாவட்டம் சிரா தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(நவம்பர்) 3-ந் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. சிரா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த சத்யநாராயணா மறைவால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தலை, தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. சிரா தொகுதி பற்றிய விவரம் வருமாறு:-

துமகூரு மாவட்டத்தில் அமைந்து உள்ள சிரா தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு முதல் இதுவரை 14 முறை சட்டசபை தேர்தல் நடந்து உள்ளது. அதில் மைசூரு மாநிலமாக இருந்த போது 4 முறையும், கர்நாடகம் மாநிலமாக மாறிய பின்னர் 10 முறையும் தேர்தல்கள் நடந்து உள்ளன. கடந்த 1957-ம் ஆண்டு முதல்முறையாக சிரா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது அந்த தொகுதி எஸ்.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தாரேகவுடா வெற்றி வாகை சூடினார். அதன்பின்னர் இந்த தொகுதி பொதுபிரிவினருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து 1962-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களம் இறங்கிய முக்கனப்பா வெற்றி பெற்றார்.

1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இதினப்பாவும், 1972-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பரீத்தும், 1978-ல் நடந்த தேர்தலில் இந்திரா காங்கிரஸ் வேட்பாளர் சோமப்பாவும், 1983-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சோமப்பாவும், 1985-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனதா கட்சி வேட்பாளர் பசவராஜூம், 1989-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் குருதேவும், 1994 மற்றும் 1999-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் சிவப்பாவும், 2004-ம் ஆண்டு தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் விஸ்வநாத்தும், 2008, 2013-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர் டி.பி.ஜெயசந்திராவும், 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் சத்ய நாராயணாவும் வெற்றி அடைந்து உள்ளனர்.

பெரும்பாலும் சிரா தொகுதியில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சி தான் மாறி, மாறி வெற்றி பெற்று வந்து உள்ளது. விவசாயம் பிரதான தொழிலாக உள்ள இந்த தொகுதியில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 3 லட்சத்து 13 ஆயிரத்து 758 மக்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 978 பேர் ஆண்கள், 1 லட்சத்து 54 ஆயிரத்து 780 பேர் பெண்கள் ஆவார்கள். 1000 ஆண்களுக்கு 974 பெண்கள் வசித்து வருகின்றனர். இந்த தொகுதியில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 782 இந்துக்களும், 30 ஆயிரத்து 222 முஸ்லிம்களும், 436 கிறிஸ்தவர்கள் உள்பட பல்வேறு மதத்தினர் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் மறைந்த சத்ய நாராயணா எம்.எல்.ஏ.வின் மனைவி அம்மாஜம்மா களம் இறங்குகிறார். காங்கிரஸ் சார்பில் டி.பி.ஜெயச்சந்திரா போட்டியிடுகிறார். பா.ஜனதா சார்பில் ராஜேஷ் கவுடா என்பவர் போட்டியிடுகிறார். இவர் சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தவர் ஆவார்.

மறைந்த சத்ய நாராயணா தொகுதி மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்றவர். அவர் ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், அந்த சமுதாய வாக்குகளை கவரவும், அனுதாப வாக்குகளை பெறவும் அவரது மனைவியை ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளராக களம் இறக்கி உள்ளது. அதுபோல காங்கிரஸ் வேட்பாளர் டி.பி.ஜெயசந்திராவும் இந்த தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அதனால் அவருக்கும் தொகுதி மக்கள் மத்தியில் நற்பெயர் உள்ளது. ஆனால் பா.ஜனதாவுக்கு இந்த தொகுதியில் ஆதரவு இல்லை. இருப்பினும் மாநிலத்தில் பா.ஜனதா அரசு ஆட்சியில் இருப்பதால், சிரா தொகுதியை கைப்பற்ற பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டுவார்கள் என்று தெரிகிறது. சிரா தொகுதியில் குடிநீர் முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.

சிரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரிகள் தூர்வாரப்பட்டாலும், தண்ணீர் இல்லாமலும் கிடக்கிறது. இந்த பிரச்சினை தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக அடுத்த மாதம் 10-ந் தேதி சிரா தொகுதி யாருக்கு என்பது தெரிந்து விடும். அங்கு மீண்டும் காங்கிரஸ் அல்லது ஜனதாதளம்(எஸ்) கட்சி வெற்றி பெறுமா? அல்லது 20 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு தாமரை மலருமா என்பது தெரியும்.
Tags:    

Similar News