செய்திகள்
கோப்புப்படம்

நீரிழிவு நோய் காரணமாக இந்தியாவில் 13¾ கோடி பேருக்கு பார்வை இழப்பு அபாயம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Published On 2020-10-19 19:37 GMT   |   Update On 2020-10-19 19:37 GMT
நீரிழிவு நோய் காரணமாக இந்தியாவில் 13 கோடியே 76 லட்சம் பேர், பார்வை இழப்பை எதிர்நோக்கி உள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவித்து உள்ளன.
புதுடெல்லி:

பார்வை இழப்பு பிரச்சினை என்பது பொதுவாக வயது முதிர்வு மற்றும் நீரிழிவு நோய்களால் ஏற்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 40 வயதுக்கு பிறகு மெல்ல, மெல்ல பார்வை பிரச்சினைகளால் பாதிக்கப்படக்கூடும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

இந்த நிலையில் பார்வை இழப்பு பற்றி பார்வை இழப்பு நிபுணர் குழு மற்றும் பார்வை இழப்பை தடுக்கும் சர்வதேச அமைப்பு ஆகியவை சார்பில் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உலகம் முழுவதும் ஏழெட்டு மாதங்கள் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.

இதன்படி உலகம் முழுவதும் 50 கோடியே 70 லட்சம் பேர், பார்வை இழப்பை எதிர்நோக்கி இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்தியாவில் 13 கோடியே 76 லட்சம் பேர் பார்வை இழப்பை எதிர்நோக்கி இருக்கிறார்கள். இதில் 78 சதவீதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1990-ம் ஆண்டு பார்வை இழப்பை எதிர்நோக்கி இருந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 5 கோடியே 77 லட்சமாக இருந்தது. இதைப்போல 1990-ல் 4 கோடியாக இருந்த மிதமான மற்றும் கடுமையான பார்வையிழப்பு குறைபாடு கொண்டவர்களின் எண்ணிக்கை தற்போது 7 கோடியே 90 லட்சமாக உயர்ந்து இருக்கிறது.

இந்த பார்வை இழப்புக்கு முக்கிய காரணம் நீரிழிவு நோய் தான் என்று அந்த அறிக்கை கூறுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் 6 கோடியே 50 லட்சம் நீரிழிவு நோயாளிகள் இருந்ததாக லான்செட் ஆய்வறிக்கை தெரிவித்து இருந்தது. பார்வை இழப்பு பிரச்சினை அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், இந்தியரின் ஆயுட்காலம் உயர்ந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். 1990-ல் 59 ஆக இருந்த ஆயுட்காலம் தற்போது 70 ஆக உயர்ந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News