செய்திகள்
பரூக் அப்துல்லா

காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் - முன்னாள் முதல்மந்திரி பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை விசாரணை

Published On 2020-10-19 14:15 GMT   |   Update On 2020-10-19 14:15 GMT
காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்மந்திரி பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஸ்ரீநகர்:

காஷ்மீரில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக கடந்த 2002 முதல் 2011 ஆம் ஆண்டுவரை காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்திற்கு இந்திய கிரிக்கெட் சங்கம் 112 கோடி ரூபாய் நிதியாக வழங்கியது. 

இந்த நிதியில் 43.69 கோடி ரூபாயை கிரிக்கெட் நடவடிக்கைகளுக்கு செலவிடாமல் பணமோசடியில் ஈடுபட்டதாக அப்போது காஷ்மீர் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த அப்போதைய காஷ்மீர் முதல்மந்திரி பரூக் அப்துல்லா உள்ளிட்ட பலர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறது.  

இந்நிலையில், கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்மந்திரி பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். 

ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்கு பின் அமலாக்கத்துறை அலுவலகத்தை விட்டு வெளியே வந்த பரூக் அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:- 

இந்த விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. புதிதாக ஒன்றும் இல்லை. இதற்கு மேல் நான் எதையும் கூற விரும்பவில்லை. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்கும். எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை.

நாம் மிக நீண்ட தூரம் செல்லவேண்டியுள்ளது, பரூக் அப்துல்லா அரசியலில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உயிருடோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் மிக நீளமான அரசியல் போராட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டும்.  

நான் தூக்கிலிடப்பட்டாலும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் பெறும் வரை நமது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

என்றார்.
Tags:    

Similar News