செய்திகள்
தேஜஸ்வி யாதவ்

சிராக் பஸ்வானுக்கு ஆதரவாக பேசிய தேஜஸ்வி- நிதிஷ் குமாருக்கு இரட்டை தலைவலி

Published On 2020-10-19 09:33 GMT   |   Update On 2020-10-19 09:33 GMT
சிராக் பஸ்வானுக்கு ஆதரவாக தேஜஸ்வி யாதவ் பேசியது நிதிஷ் குமாருக்கு தேர்தலில் இரட்டை தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
பாட்னா:

பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த தேர்தலை முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கூட்டணி ஒரு அணியாகவும், எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் சந்திக்கின்றன. 

இதேபோல் ஆளும் என்டிஏ கூட்டணியில் இருந்து பிரிந்த லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடுகிறது. கூட்டணியில் இருந்து பிரிந்தாலும் பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கிறார். 

முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 28ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தலைவர்களின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிரக் பஸ்வான் பிரச்சாரத்தின்போது முதல்வர் நிதிஷ் குமாரை விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் அவரது தந்தை ராம்விலாஸ் பஸ்வான் மறைந்தபோது, முதல்வர் இரங்கல்கூட தெரிவிக்கவில்லை என்று  குற்றம்சாட்டினார். 

விமான நிலையத்தில் தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் நிதிஷ் குமாரின் காலில் விழுந்து வணங்கியபோது,அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் வேதனையுடன் கூறினார். இது முதல்வர் நிதிஷ் குமாருக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

மறுபுறம் எதிர்க்கட்சிகளின் முதல்வர் வேட்பாளரும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவும் முதல்வர் நிதிஷ் குமாருக்கு எதிரான பிரச்சரத்தை தீவிரப்படுத்தி உள்ளார். 

இந்நிலையில் சிரக் பஸ்வானுக்கு தேஜஸ்வி யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார். சிராக் விஷயத்தில் நிதிஷ் செய்தது நல்லதல்ல. சிராக் பஸ்வானுக்கு முன்பை விட இந்த நேரத்தில் அவரது தந்தை தேவை. ஆனால் ராம் விலாஸ் பஸ்வான் நம்மிடையே இல்லை, அதைப் பற்றி நாங்கள் கவலை கொள்கிறோம். நிதீஷ் குமார் நடந்து கொண்ட விதம் சிராக் பாஸ்வானுக்கு இழைக்கப்பட்ட அநீதி’ என்று தேஜஸ்வி தெரிவித்தார்.

சிராக் பஸ்வானுக்கு ஆதரவாக தேஜஸ்வி பேசியதால் நிதிஷ் குமாருக்கு இரட்டை தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலை நீடித்ததால் தேர்தலில் நிதிஷ் குமாருக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
Tags:    

Similar News