செய்திகள்
லோக்பால்

4 மத்திய மந்திரிகள், மாநில மந்திரிகள் உள்ளிட்டோர் மீது லோக்பால் அமைப்பில் 1,427 ஊழல் புகார்

Published On 2020-10-17 18:52 GMT   |   Update On 2020-10-17 18:52 GMT
4 மத்திய மந்திரிகள், மாநில மந்திரிகள் உள்ளிட்டோர் மீது லோக்பால் அமைப்பில் 1,427 ஊழல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

பிரதமர், முன்னாள் பிரதமர், மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், மத்திய அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் அமைப்பு லோக்பால் ஆகும்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், லோக்பால் அமைப்பிடம் புகார் அளிப்பதற்கான ஒரு வடிவமைப்பை மத்திய அரசு வெளியிட்டது. இந்த அமைப்பின் தலைவராக நீதிபதி பினாகி சந்திர கோஷ் உள்ளார்.

இந்த லோக்பால் அமைப்பு ஒரே ஆண்டில் (2019-20) 1,427 புகார் மனுக்களை பெற்றுள்ளது. இவற்றில் 613 புகார்கள் மாநில அரசு அதிகாரிகளுக்கு எதிரானவை. 4 மத்திய மந்திரிகள் மீதும் லோக்பால் அமைப்பிடம் ஊழல் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக 245 புகார்கள், பொதுத்துறை நிறுவனங்கள், நீதித்துறை அமைப்புகள், தன்னாட்சி அமைப்புகள் மீது 200 புகார்கள், 135 புகார்கள் தனி நபர்கள், அமைப்புகளுக்கு எதிராகவும் அளிக்கப்பட்டுள்ளன.

மாநில மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள். மீது 6 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

மொத்த புகார்களில் 220 கோரிக்கைகள், கருத்துகள், பரிந்துரைகளாக அமைந்துள்ளன.

மாநில அரசு அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்கள், நீதித்துறை அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்களுக்கு எதிராக 613 புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

லோக்பால் அமைப்பில் மொத்த புகார்களில் 1,347 புகார்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. 1,152 புகார்கள் லோக்பால் அதிகார எல்லைக்கு அப்பால் உள்ளவையாக வந்துள்ளன. 78 புகார்கள் முறைப்படி இல்லாததால், பரிந்துரைக்கப்பட்ட படிவங்களில் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

45 புகார்கள் விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளன. 32 புகார்கள், தகுந்த நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

29 புகார்கள், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் நிலுவையில் உள்ளன.

இந்த தகவல்களை லோக்பால் அமைப்பு வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News