செய்திகள்
100 சதவீத மதிப்பெண் பெற்ற அகான்ஷா சிங், சோயப் அப்தாப்

இந்தியாவில் முதல் முறை... நீட் தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற்று 2 மாணவர்கள் சாதனை

Published On 2020-10-17 04:42 GMT   |   Update On 2020-10-17 04:42 GMT
இந்தியாவில் முதல் முறையாக நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண் எடுத்து ஒடிசா மாணவர் சோயப் அப்தாப் மற்றும் டெல்லி மாணவி அகான்ஷா சிங் சாதனை படைத்துள்ளனர்.
புதுடெல்லி:

நீட் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன. இதில், ஒடிசாவை சேர்ந்த மாணவர் சோயப் அப்தாப் மற்றும் டெல்லியைச் சேர்ந்த மாணவி அகான்ஷா சிங் ஆகியோர் 720-க்கு720 மதிப்பெண் எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்தனர். 

நீட் தேர்வு வரலாற்றில் இதுவரை எந்த மாணவரும் முழு மதிப்பெண் பெற்றதில்லை. இரண்டு பேர் 100% மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றதையடுத்து டை-பிரேக் கொள்கைகளின் படி சோயப் அப்தாப் சீனியர் மாணவர் என்பதால் அவருக்கு முதலிடம் வழங்கப்பட்டது. 

முதலிடம் பிடித்துள்ள சோயப் அப்தாப், டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். மாணவி அகான்ஷா சிங், நரம்பியல் அறுவை சிகிச்சை ஆராய்ச்சியாளராக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு கடந்த செப்.13-ம் தேதி நடந்தது. தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு அக்.14-ம் தேதி மறுதேர்வு நடைபெற்றது. மொத்தம் 13.66 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 7 லட்சத்து 71,500 (56.44%) பேர் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்க தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 99,610 மாணவர்கள் தேர்வெழுதியதில் 57,215 பேர்(57.44 சதவீதம்) தகுதி பெற்றனர். இது கடந்த ஆண்டைவிட 8.87 சதவீதம் அதிகம்.
Tags:    

Similar News