செய்திகள்
ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.

கொரோனா வைரஸ் எனக்கு பாடம் கற்பித்துள்ளது: ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.

Published On 2020-10-17 01:54 GMT   |   Update On 2020-10-17 01:54 GMT
தனக்கு இன்னும் உடல் சோர்வாக இருப்பதாகவும், கொரோனா வைரஸ் தனக்கு பாடம் கற்பித்துள்ளதாகவும் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. கூறினார்.
பெங்களூரு :

முதல்-மந்திரி எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பிரதமர் மோடி, முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் கொரோனாவை தடுக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை கூறியுள்ளனர். ஆனால் அதை பொதுமக்கள் பின்பற்றுவது இல்லை. பொதுமக்களின் அலட்சியத்தால் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலுக்கு அரசு காரணம் அல்ல. எனது தொகுதியில் நான் சுற்றுப்பயணம் செய்து முகக்கவசம், மருந்துகளை வழங்கியுள்ளேன். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். அனைவரும் தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும்.

நான் சட்டசபை கூட்டத்தில் கலந்துகொண்டதால் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்ற நினைக்கிறேன். நான் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றேன். 18 நாட்களுக்கு பிறகு வெளியே வந்துள்ளேன். கொரோனா எனக்கு பாடம் கற்பித்துள்ளது. என்னால் சரியான முறையில் தூங்கவோ அல்லது உணவு உண்ணவோ முடியவில்லை. டாக்டர்கள் எனக்கு உரிய சிகிச்சை அளித்தனர். நான் எனது வீட்டில் தனி அறையில் இருந்தேன். குடும்பத்தினருடன் முற்றிலுமாக தொடர்பை துண்டித்துக் கொண்டேன்.

இன்னும் கூட எனக்கு உடல் சோர்வாக உள்ளது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் இந்த பத்திரிகையாளர் கூட்டத்தை கூட்டியுள்ளேன். கொரோனா பாதிப்பு இல்லாவிட்டாலும் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறி பணம் வசூலிப்பதாக புகார் கூறப்படுகிறது. இது முற்றிலும் தவறானது. ஒவ்வொருவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எனது மனைவி, சகோதரிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

கொரோனா வந்துவிட்டதால் இதை அவமானம் என்று யாரும் கருதக்கூடாது. பொதுமக்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எனக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட பலர் வாழ்த்து கூறினர். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன். ஒரு வாரம் ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். அதன்படி நான் ஓய்வு எடுக்க உள்ளேன். அதன் பிறகு மக்களை சந்திப்பேன்.

இவ்வாறு ரேணுகாச்சார்யா கூறினார்.
Tags:    

Similar News