செய்திகள்
குசுமா ரவி, வேட்புமனுவை தாக்கல் செய்தபோது எடுத்தபடம். அருகில் டி.கே.சிவக்குமார் உள்ளனர்.

ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி மக்கள் காங்கிரசை ஆதரிப்பார்கள்: டி.கே.சிவக்குமார்

Published On 2020-10-15 02:43 GMT   |   Update On 2020-10-15 02:43 GMT
ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் கடந்த 2 முறை தொடர்ச்சியாக காங்கிரசை வெற்றி பெற வைத்தனர். இந்த முறையும் காங்கிரஸ் வேட்பாளரை இந்த தொகுதி வாக்காளர்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு :

ராஜராஜேஸ்வரிநகர் தொகுதி மக்கள் காங்கிரசை ஆதரிப்பார்கள் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் குசுமா ரவி நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதன் பிறகு மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, நன்கு படித்த பெண்ணை தேர்ந்தெடுத்து வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். இந்த தொகுதி மக்கள் அறிவார்ந்தவர்கள். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். கடந்த 2 முறை தொடர்ச்சியாக காங்கிரசை வெற்றி பெற வைத்தனர். இந்த முறையும் காங்கிரஸ் வேட்பாளரை இந்த தொகுதி வாக்காளர்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஏன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் என்பது இந்த தொகுதி வாக்காளர்களுக்கு தெரியும். அதுபற்றி விவாதிக்க நாங்கள் விரும்பவில்லை. டி.ஜே.ஹள்ளி கலவரத்தில் போலீசார் காங்கிரசாரின் பெயரை சேர்த்துள்ளனர். இந்த கலவரத்தை காங்கிரஸ் அல்லாதவர்கள் செய்துள்ளனர்.

போலீசார் மிரட்டி வாக்குமூலம் பெற்றுள்ளனர். காங்கிரசாரை மிரட்டும் போக்கை போலீசார் கைவிட வேண்டும். இந்த மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், மத்திய- மாநில அரசுகள் கவிழ்ந்துவிடாது. ஆனால் இங்கு காங்கிரசை வெற்றி பெற வைத்து அந்த 2 அரசுகளுக்கும் ஒரு வலுவான தகவலை இந்த தொகுதி மக்கள் வழங்க வேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Tags:    

Similar News