செய்திகள்
கோப்புப்படம்

உலகளாவிய ஊரடங்கால் வரலாறு காணாத வகையில் காற்று மாசுபாடு குறைந்தது - ஆய்வில் தகவல்

Published On 2020-10-15 00:25 GMT   |   Update On 2020-10-15 00:25 GMT
ஊரடங்கால் உலக அளவில் வரலாறு காணாத வகையில் காற்று மாசுபாடு குறைந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:

கொரோனா பரவல் உச்சம் பெற்றதால் இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகள் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. தற்போது அதில் பல நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி படிப்படியாக ஊரடங்கை விலக்கி வருகின்றன.

இந்த ஊரடங்கால் உலக அளவில் வரலாறு காணாத வகையில் காற்று மாசுபாடு குறைந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த ஆண்டின் முதல் 6 மாத காலத்தில், முந்தைய ஆண்டின் அதே காலகட்டத்தைவிட 8.8 சதவீதம் கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்தல் குறைந்திருக்கிறது.

குறிப்பாக கொரோனாவின் முதல் அலை உச்சம் பெற்றிருந்த ஏப்ரல் மாதத்தில் 16.9 சதவீதம் குறைந்திருக்கிறது. மொத்தத்தில் 155 கோடி டன் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறுதல் குறைந்திருக்கிறது. இது முன்னெப்போதும் இல்லாததாகும்.

உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட 2008-ம் ஆண்டு, எண்ணெய் நெருக்கடி ஏற்பட்ட 1979 ஆண்டு மற்றும் இரண்டாம் உலகப்போர் காலகட்டங்களைவிட அதிக அளவு மாசு குறைந்திருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

போக்குவரத்து துறை முடங்கியதே பெரும்பாலான மாசு குறைபாட்டுக்கு, அதாவது மக்கள் வீடுகளில் இருந்து பணி செய்ததால் 40 சதவீத மாசு குறைப்புக்கு போக்குவரத்து துறையே காரணம் என அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் டேனியல் கம்மன் கூறியுள்ளார்.

இந்த ஆய்வு மாசுபாட்டை கண்டறிய பயன்பட்டது மட்டுமின்றி, எதிர்காலத்தில் இதுபோன்று மாசுக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் வழி வகுத்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News