செய்திகள்
கோப்பு படம்

அரசு கல்லூரி தங்கும் விடுதியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - உத்தரபிரதேசத்தில் கொடூரம்

Published On 2020-10-12 15:24 GMT   |   Update On 2020-10-12 15:24 GMT
உத்தரபிரதேசத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி தங்கும் விடுதியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மாணவர்கள் தங்கும் விடுதி அமைந்துள்ளது. அந்த விடுதியில் மாணவர்கள் சிலர் தங்கியுள்ளனர்.

இதற்கிடையில், இந்த அரசு பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு மையமாக மாற்றப்பட்டு நேற்று சிவில் சர்விஸ் தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வு நடைபெற்ற போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

ஆனால், கல்லூரி வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் எந்த ஒரு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்படாமல் இருந்தது.

அந்த விடுதியில் தங்கியிருந்த தனது நண்பனை சந்திக்க நேற்று 17 வயது சிறுமி வந்துள்ளார். அப்போது அந்த விடுதியில் இருந்த 2-ம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்கள் சிலர் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக விடுதி கட்டிடத்திற்குள் இழுத்து சென்றுள்ளனர். 

தடுக்க வந்த சிறுமியின் நண்பனையும் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், அந்த சிறுமியை ஒரு மாணவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதை மற்ற மாணவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.  

அப்போது சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு அவ்வழியாக வந்த போலீஸ் விடுதிக்குள் நுழைந்துள்ளார். போலீஸ் வருவதை கண்ட மாணவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி அளித்த புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மாணவன் உள்பட 2-ம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்கள் 4 பேரை கைது செய்துள்ளனர்.     

உத்தரபிரதேசத்தில் அரசு கல்லூரி தங்கும் விடுதியில் 17 வயது சிறுமி 2-ம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பத்தில் உத்தரபிரதேச அரசு பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
Tags:    

Similar News