செய்திகள்
உச்ச நீதிமன்றம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான திமுக வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2020-10-12 08:38 GMT   |   Update On 2020-10-12 08:38 GMT
வேளாண் சட்டங்களுக்கு எதிரான திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி:

கடந்த பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்றியது. இதற்கு, குடியரசுத் தலைவர் சட்ட ஒப்புதல் வழங்கிய நிலையில் அது சட்டமாகி உள்ளது. இந்த மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையான வாதங்களை வைத்தன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. தமிழகத்தில் திமுக தலைமையில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தியது. அத்துடன், வேளாண் சட்டங்குகளுக்கு எதிராக திமுக சார்பில் திருச்சி சிவா எம்பி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

கேரள மாநில காங்கிரஸ் எம்பி பிரதாபன், இந்திய கம்யூனிஸ்ட் எம்பி பினோய் விஸ்வம் உள்ளிட்டோரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

திருச்சி சிவா எம்பி தாக்கல் செய்த மனுவில், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதாயமாக உள்ளன. இது விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். விவசாயிகளின் சுதந்திரம் மற்றும் அவர்களுக்கு ஏதுவாக விற்பனை செய்யக்கூடிய திறனைப் பறிக்கும் வகையில் இந்தச் சட்டங்கள் உள்ளன. விவசாயத் துறையை முழுமையாக கார்ப்பரேட்டுகளின் வசம் ஒப்படைக்கும் வகையில் இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. எனவே, இந்தச் சட்டங்கள் செல்லாது என்றும், அரசியல் சாசனத்திற்கு எதிரானவை என்றும் நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமை பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிரான திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News