செய்திகள்
அபிஷேக் சிங்வி

எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

Published On 2020-10-12 02:00 GMT   |   Update On 2020-10-12 02:00 GMT
அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டும் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதால் முதல்-மந்திரி எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு :

அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு அதிக ஊழலில் திளைக்கிறது. எடியூரப்பாவுக்கு கொஞ்சமாவது வெட்கம் இருந்தால், அவர் தனது முதல்-மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை பா.ஜனதா நீக்க வேண்டும். எடியூரப்பாவின் மகன், மருமகன், பேரன் ஆகியோர் அரசு திட்ட பணிக்கு லஞ்சம் வாங்கியுள்ளனர். இதற்கான ஆவணங்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. ஆயினும் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் மவுனம் காப்பது ஏன்?.

பெங்களூருவில் ரூ.662 கோடி அடுக்குமாடி வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்ற ஊழலில் எடியூரப்பாவின் குடும்ப உறுப்பினர்களுக்கு நேரடி தொடர்பு உள்ளது. இதுகுறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அந்த திட்ட ஒப்பந்ததாரருக்கும், எடியூரப்பாவின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும் இடையே நடைபெற்ற தகவல் தொடர்பு, பெங்களூரு வளர்ச்சி ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்தது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

கூடுதலாக லஞ்சம் கேட்டுள்ளனர். இதையடுத்து அந்த ஒப்பந்ததாரர், கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனங்களுக்கு லஞ்ச பணத்தை அனுப்பியுள்ளார். ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் பணம் மோசடி தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இந்த ஊழல் குறித்து விசாரணை கூட நடைபெறவில்லை. வழக்கு பதிவும் செய்யவில்லை. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அல்லது ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்த வேண்டும். பா.ஜனதா மோசடி செய்யும் கட்சி.

இவ்வாறு அபிஷேக்சிங்வி கூறினார்.
Tags:    

Similar News