செய்திகள்
கோப்புப்படம்

பீகார் தேர்தலில் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் ஓட்டு போடலாம்?

Published On 2020-10-10 23:16 GMT   |   Update On 2020-10-10 23:16 GMT
பீகார் தேர்தலில், நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் ஓட்டு போட வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:

கல்வி, வேலைவாய்ப்பு, திருமணத்துக்கு பிந்தைய உறைவிடம் போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு ஓட்டு இருக்கும் மாநிலங்களில் சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களின்போது அவர்களால் ஓட்டு போட முடியாத நிலை ஏற்படுகிறது.

தேர்தல்களில் இவ்வாறு ஏற்படும் வாக்கு இழப்பு குறித்து கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன், நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியது. இதில் சுமார் 29 கோடி ஓட்டுகள் இழப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டது. இந்த ஓட்டுகளை ‘இழப்பு ஓட்டுகள்’ என்றே வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் பீகாரில் வருகிற 28-ந் தேதி முதல் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அங்கு 7.2 கோடி வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதி வாய்ந்தவர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் 18.87 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிமாநிலங்களிலும், பிற மாவட்டங்களிலும் பரவி உள்ளனர்.

இவர்களில் 16.6 லட்சம் பேர் கொரோனா ஊரடங்கு காரணமாகவும், தேர்தலுக்காகவும் சொந்த ஊர் திரும்பி உள்ளனர். மீதமுள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் சொந்த ஊர் திரும்பவில்லை. அவர்கள் திரும்பவில்லை என்றால், அவர்களது வாக்குகள் இழப்பு ஓட்டாக மாறும் வாய்ப்பு உள்ளது.

எனவே முதல் முறையாக பீகார் தேர்தலில், நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் வாக்களிக்கும் முறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக பரிந்துரைகளை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பரிந்துரைகளை அடுத்த மாதம் 3-ந் தேதி வரை வழங்கலாம்.

இதில் சிறந்த 10 பரிந்துரைகள் நடுவர் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். மிகவும் நடைமுறை சாத்தியம் உள்ள 3 பரிந்துரைகளுக்கு பணப்பரிசு வழங்கப்படும்.

சிறந்த பரிந்துரையை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதை பீகார் தேர்தலுக்கு பின்பற்ற தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கும். அப்படி அமல்படுத்தப்பட்டால், நாட்டில் எந்த பகுதியில் இருந்தும் பீகார் தேர்தலில் ஓட்டளிக்க அந்த மாநில வாக்காளர்களுக்கு வாய்ப்பு ஏற்படும்.

அதே நேரத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த நேரக்குறைவு உள்ளிட்ட தடங்கல்கள் ஏற்பட்டால், அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நடக்கும் மேற்கு வங்காள தேர்தலில் அமல்படுத்தப்படும் என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:    

Similar News