செய்திகள்
ரிசர்வ் வங்கி

கடன் தவணையை நீட்டிக்க வாய்ப்பே இல்லை - சுப்ரீம் கோர்ட்டில், ரிசர்வ் வங்கி திட்டவட்டம்

Published On 2020-10-10 19:00 GMT   |   Update On 2020-10-10 19:00 GMT
கடன் தவணையை 6 மாதங்களுக்கு மேல் நீட்டிக்க வாய்ப்பே இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. பல லட்சம் பேர் வேலை இழந்தனர். அதை கருத்தில் கொண்டு தனிநபர்கள், நிறுவனங்கள் பெற்ற வங்கி கடன்களுக்கான தவணைகளை செலுத்த கடந்த மார்ச் 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 31-ந்தேதி வரை 6 மாதங்களுக்கு காலஅவகாசம் அளிப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.

ஆனால், கடன் தவணை ஒத்திவைக்கப்பட்ட 6 மாத காலத்துக்கு வங்கிகள் வட்டி விதித்தன. இதனால் அதிருப்தி அடைந்த சிலர், வங்கி நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘ரூ.2 கோடி வரையிலான கடன் தவணைக்கு வட்டிக்கு வட்டி வசூல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் அமர்வு, ‘பிரமாண பத்திரத்தில் முழுமையான விவரங்கள் இல்லை. அதனால், புதிதாக மற்றொரு பிரமாண பத்திரத்தை மத்திய அரசு, ரிசர்வ் வங்கி தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறியது.

அதனைத்தொடர்ந்து நேற்று ரிசர்வ் வங்கி சார்பில் புதிதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கொரோனா தவணையுரிமை காலத்தை நீட்டிக்க சில மனுதாரர்கள் கோருகின்றனர். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வங்கிக்கடன் பெற்றவர்களுக்கு அதனை செலுத்தும் வகையிலும், வங்கிகளின் செயல்பாட்டை பாதுகாக்கும் முயற்சியாகவும் தற்காலிகமாக தவணையுரிமை காலம் அளிக்கப்பட்டது.

கடன் தவணை உரிமை காலத்தை 6 மாதங்களுக்குமேல் நீட்டித்தால் கடனை திருப்பி செலுத்தும் போக்கில் பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும் வங்கி கடன்களை உரிய நேரத்தில் செலுத்துவது சீர்குலையும். கடன் ஆக்கத்தில் வலுவிழக்க செய்யும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், சிறிய அளவிலான வங்கிக்கடன் பெறுவோர் பாதிப்படைவார்கள். எனவே கடன் தவணையை நீட்டிக்க வாய்ப்பே இல்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் போன்ற துறைகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத்தை தாண்டி, கூடுதல் நிவாரணத்தை அளிக்க முடியாது. கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி வரை கடன் தொகையை கட்டாத கணக்குகளை, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்ற இடைக்கால தடையை நீக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நாளை (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
Tags:    

Similar News