செய்திகள்
ராகுல் காந்தி

வீரர்களுக்கு உடைகள் வாங்குவதில் தாமதம் - பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி தாக்கு

Published On 2020-10-09 00:50 GMT   |   Update On 2020-10-09 00:50 GMT
பிரதமர் வீரர்களைப்பற்றி கவலைப்படவில்லை. தனது பிம்பத்தை உயர்த்துவது பற்றியே அவர் கவலைப்படுகிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:

சியாச்சின்-லடாக் எல்லையில் கடுமையான குளிருக்கு மத்தியில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வரும் ராணுவ வீரர்களுக்கு கதகதப்பான உடைகள் உள்ளிட்ட குளிரை தாங்கும் பொருட்கள் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கை வெளியிட்டு உள்ளார். இந்த அறிக்கை தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த அறிக்கையை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்த அவர், அத்துடன் பிரதமர் மோடிக்கு கண்டனமும் தெரிவித்து இருந்தார். குறிப்பாக ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய முக்கிய பிரமுகர்களுக்கு விமானம் வாங்கும் விவகாரத்தை குறிப்பிட்டு அவர் குறை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘பிரதமர் தனக்கு ரூ.84 ஆயிரம் கோடியில் விமானம் வாங்கியுள்ளார். இந்த பணத்தில் சியாச்சின்-லடாக் எல்லையில் பணியாற்றும் வீரர்களுக்கு 30 லட்சம் உடைகள், 60 லட்சம் ஜாக்கெட்டுகள், 67 லட்சத்து 20 ஆயிரம் காலணிகள், 16 லட்சத்து 80 ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க முடியும். ஆனால் பிரதமர் வீரர்களைப்பற்றி கவலைப்படவில்லை. தனது பிம்பத்தை உயர்த்துவது பற்றியே அவர் கவலைப்படுகிறார்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
Tags:    

Similar News