செய்திகள்
பாஜகவினர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்த காட்சி

கொல்கத்தாவில் போராட்டம் நடத்திய பாஜகவினர் மீது போலீஸ் தடியடி

Published On 2020-10-08 08:29 GMT   |   Update On 2020-10-08 08:29 GMT
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசைக் கண்டித்து பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியின்போது போலீசார் தடியடி நடத்தினர்.
கொல்கத்தா:

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன. சில சமயம் பயங்கர மோதலாகவும் வெடிக்கிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரசார் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், பாஜக தொண்டர்கள் கொல்லப்படுவதாகவும் அக்கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். மாநிலத்தில் ஊழல் மற்றும் குண்டர்கள் ராஜ்ஜியம் நடப்பதாகவும், சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் மாநில அரசைக் கண்டித்து பாஜக சார்பில் ஹவுராவில் உள்ள தலைமைச் செயலகம் நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பாஜகவினர் கொல்கத்தா மற்றும் ஹவுராவில் இருந்து பேரணியாக சென்றனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பேரணிக்கு திட்டமிடப்பட்ட சாலைகள், தெருக்கள் அடைக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட பகுதிகளில் போலீசார் பேரிகார்டுகள் அமைத்திருந்தனர். ஆனால் தடையை மீறி பேரணி நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹவுராவில் போலீசாரின் பேரிகார்டு தடுப்பை மீறி பாஜகவினர் முன்னேறி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதேபோல் கொல்கத்தாவின் ஹாஸ்டிங்ஸ் பகுதியில் நடந்த பேரணியின்போது பாஜகவினர் மீது போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் கூட்டத்தை கலைத்தனர்.  

போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பாஜக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். போலீசாரைக் கண்டித்து பாஜகவினர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News