செய்திகள்
ஸ்வப்னா சுரேஷ்

ஸ்வப்னாவை பணி நியமனம் செய்தது, முதல்-மந்திரிக்கு தெரியும்: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் தகவல்

Published On 2020-10-08 05:16 GMT   |   Update On 2020-10-08 05:16 GMT
கேரள தங்க கடத்தல் ராணி ஸ்வப்னாவை, விண்வெளி பூங்காவில் பணி நியமனம் செய்தது, முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு தெரியும் என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
கொச்சி:

கேரளாவில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி 30 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது. இந்த தங்கம், அங்குள்ள ஐக்கிய அரபு அமீரக துணை தூதரகத்தின் பெயரால் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கில் அந்த துணை தூதரகத்தில் பணியாற்றிய இளம்பெண் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட பலர் சிக்கினர்.

இந்த ஸ்வப்னா, அங்குள்ள அரசியல்வாதிகளுடனும், மூத்த அதிகாரிகளுடனும் நெருக்கமாக பழகியது தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த தங்க கடத்தல் விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகிறது.

தங்க கடத்தலில் நடந்த சட்ட விரோத கருப்புபண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது.

இந்தநிலையில், தங்க கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டவர்கள் மீதான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், கொச்சியில் உள்ள முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் அமலாக்கத்துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த குற்றப்பத்திரிகையில், ஸ்வப்னா சுரேஷை விண்வெளி பூங்காவில் பணி நியமனம் செய்தது முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு தெரியும் என கூறப்பட்டுள்ளது.

முதல்-மந்திரி பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் எம்.சிவசங்கரின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்ததால்தான், ஸ்வப்னா சுரேஷ் பணி நியமனம் செய்யப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஸ்வப்னா சுரேசுக்கு பணி நியமனம் வழங்க முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு சிபாரிசு செய்தவர் இந்த சிவசங்கர்தான்.

இந்த வேலையை பெற்றுக்கொள்ளுமாறு கூறிய கேரள மாநில தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்தோஷை சந்திக்குமாறும் ஸ்வப்னாவை சிவசங்கர்தான் கூறி உள்ளார்.

23 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையில், ஸ்வப்னாவின் பண பரிமாற்றங்களில் சிவசங்கருக்கும் தொடர்பு உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவசங்கருக்கு எதிராக விரிவான விசாரணை நடத்தவும் குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை பரிந்துரைத்துள்ளது. மேலும் கருப்பு பண பரிமாற்றத்தில் ஸ்வப்னா, சரித், சந்தீப் நாயர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டதால், இந்த வழக்கில் சிக்கியிருப்பவர்கள் ஜாமீன் பெறுவது தடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறும்போது, “ஸ்வப்னா, சரித், சந்தீப் நாயர் ஆகிய 3 பேரும் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் குற்றம் செய்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.
Tags:    

Similar News