செய்திகள்
கோப்புப்படம்

ஹத்ராஸ் சம்பவம் தொடர்பான வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றம் - உத்தரபிரதேச அரசு நடவடிக்கை

Published On 2020-10-07 23:42 GMT   |   Update On 2020-10-07 23:42 GMT
ஹத்ராஸ் இளம்பெண் கூட்டு பலாத்கார சம்பவம் தொடர்பான அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டன.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த பட்டியல் இன இளம்பெண், கடந்த மாத இறுதியில் உயிரிழந்தார். அவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்டதை பிரேத பரிசோதனை அறிக்கை நிராகரித்தது. அவர் 4 பேர் கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தது.

அந்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை உத்தரபிரதேச அரசு அமைத்தது. பின்னர், கடந்த 3-ந்தேதி, சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்தது.

அதுதொடர்பான கடிதம், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 6-ந்தேதி, இவ்வழக்கை சி.பி.ஐ. ஏற்றுக்கொண்டது.

இந்த நிலையில், ஹத்ராஸ் சம்பவம் தொடர்பான அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் முறைப்படி நேற்று உத்தரபிரதேச அரசு, சி.பி.ஐ.க்கு மாற்றியது.

ஆனால், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரோ, சி.பி.ஐ. விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீதி விசாரணை கோருகிறார்கள். தங்களிடமோ, கைதான 4 பேரிடமோ, போலீசாரிடமோ உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயத்தில், சி.பி.ஐ.க்கு வழக்கு மாற்றப்பட்டபோதிலும், உத்தரபிரதேச அரசு நியமித்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணையும் இன்னொரு புறம் நடந்து வருகிறது. அக்குழுவுக்கு மேலும் 10 நாட்கள் கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News