செய்திகள்
மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன்

கொரோனாவை குணப்படுத்தும் ஆயுர்வேத சிகிச்சை முறை ஆவணம் - மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் வெளியிட்டார்

Published On 2020-10-06 23:03 GMT   |   Update On 2020-10-06 23:03 GMT
ஆயுர்வேதம், யோகா அடிப்படையிலான கொரோனா சிகிச்சை வழிமுறைகள் அடங்கிய ஆவணத்தை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் வெளியிட்டார்.
புதுடெல்லி:

கொரோனாவை குணப்படுத்தும் ஆயுர்வேத சிகிச்சை முறைகள் அடங்கிய ஆவணத்தை அகில இந்திய ஆயுர்வேத கல்வி நிலையம் உள்ளிட்ட ஆயுர்வேத கல்வி நிறுவனங்களை சேர்ந்த நிபுணர் குழுக்கள் தயாரித்துள்ளன. இதை நேற்று நடந்த நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் வெளியிட்டார்.

அப்போது ஹர்ஷவர்தன் கூறியதாவது:-

இந்த சிகிச்சை முறைகளில், தடுப்பு முறைகளும், தற்காப்பு நடவடிக்கைகளும் கூறப்பட்டுள்ளது. இது, கொரோனாவை குணப்படுத்த மட்டுமின்றி, தற்கால பிரச்சினைகளுக்கு பாரம்பரிய அறிவை பயன்படுத்தி தீர்வு காண்பதற்கும் பயன்படும்.

சுதந்திர காலத்துக்கு பிறகு, ஆயுர்வேதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. பிரதமர் மோடி வந்த பிறகுதான், அதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சிகிச்சை முறை ஆவணத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா வைரசை தடுப்பதற்கும், அதன் வீரியத்தை கட்டுப்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தி முக்கியம். நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள அஸ்வகந்தா, குடுசி கானா வடி அல்லது சவனபிராசா போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.

அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு குடுசி கானா வடி, பிப்பாலி அல்லது ஆயுஷ் 64 மருந்துகளை அளித்தால், தொற்று தீவிரம் அடைவதை தடுக்கலாம்.

லேசான பாதிப்பு இருப்பவர்களுக்கும் இவற்றை கொடுக்கலாம். வயது, எடை, நோயின் தன்மை அடிப்படையில், ஒவ்வொருவருக்கும் மருந்தின் அளவு வேறுபடும்.

இவற்றுடன், பொதுவான மற்றும் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.

கொரோனா குணமடைந்த பிறகு, நுரையீரல் கோளாறுகள், தலை சுற்றல், மனநிலை பாதிப்பு போன்றவற்றை தடுப்பதற்காக, அஸ்வகந்தா, சவனபிராசா அல்லது ரசாயனா சூர்ணா ஆகிய மருந்துகளை உட்கொள்ளலாம்.

மேலும், சுவாச திறன், இருதய செயல் திறன் ஆகியவற்றை அதிகரிக்கவும், மனஅழுத்தம், கவலையை குறைக்கவும் யோகா செய்யலாம். அதற்கான யோகா பயிற்சி முறைகள் இதில் கூறப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பு முறைகளை பெருக்க ஆயுர்வேதமும், யோகாவும் நிச்சயமாக முக்கிய பங்கு வகிக்கும்.

வெதுவெதுப்பான நீரில் உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து வாய் கொப்பளிக்கலாம். வெளியே செல்வதற்கு முன்பும், வீடு திரும்பிய பிறகும் அனு தைலம், சாட்பிந்து தைலம் ஆகியவற்றையோ அல்லது பசு நெய்யையோ தேய்க்கலாம்.

தினமும் ஒரு தடவை புதினா அல்லது யூகலிப்டஸ் ஆயிலை பயன்படுத்தி நீராவி பிடிக்கலாம். மிதமான உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். யோகா பயிற்சிகளும் செய்யலாம்.

வெதுவெதுப்பான நீரில் இஞ்சி, கொத்தமல்லி, துளசி, சீரகம் ஆகியவற்றை கலந்து குடிக்கலாம். இரவு நேரத்தில், சூடான பாலில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து குடிக்கலாம். அஜீரணம் ஏற்பட்டால் இதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News