செய்திகள்
பிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி திடீர் சந்திப்பு

Published On 2020-10-06 19:26 GMT   |   Update On 2020-10-06 19:26 GMT
ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பு 40 நிமிடத்திற்கும் மேலாக நீடித்ததாக தெரிகிறது.
புதுடெல்லி:

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். இவர் தனது அதிரடி திட்டங்களால் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். அதே சமயம் அவர் மத்திய அரசுடன் சுமுகமான உறவையே கடைப்பிடித்து வருகிறார். இதனால் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய போவதாக கடந்த 8 மாதங்களாகவே வதந்திகள் பரவி வருகின்றன.

இந்த நிலையில் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பு 40 நிமிடத்திற்கும் மேலாக நீடித்ததாக தெரிகிறது.

கடப்பா இரும்பு ஆலை உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுவது மற்றும் அவற்றுக்கான நிலுவைத் தொகையை விடுவிப்பது குறித்து பிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி விவாதித்ததாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கர்னூல் மாவட்டத்தில் ஐகோர்ட்டு அமைப்பதற்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதியையும் போலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு ரூ.1,250 கோடி நிதியையும் வழங்கிடுமாறு மோடியிடம் ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் ஆந்திர மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுமாறு பிரதமரிடம் அவர் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த சந்திப்பின்போது அரசியல் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக என்பது குறித்த தகவல்கள் இல்லை.
Tags:    

Similar News