செய்திகள்
டி.கே.சிவக்குமாரின் வீட்டில் சோதனை நடத்தி விட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் வெளியே வந்ததை படத்தில் காணலாம்.

டி.கே.சிவக்குமார் வீடுகளில் சி.பி.ஐ. நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக பரபரப்பு

Published On 2020-10-06 01:45 GMT   |   Update On 2020-10-06 01:45 GMT
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் என பெங்களூரு, டெல்லி, மும்பையில் 14 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு :

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார்.

கடந்த 2017-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் மந்திரியாக டி.கே.சிவக்குமார் இருந்தார். அப்போது குஜராத்தில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு நடந்த தேர்தலின் போது குஜராத் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பெங்களூருவுக்கு அழைத்து வந்து பிடதியில் உள்ள ரெசார்ட் ஓட்டலில் டி.கே.சிவக்குமார் தங்க வைத்திருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் டி.கே.சிவக்குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக கூறி, அவரது வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

அப்போது டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமார் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது ரூ.8½ கோடி சிக்கி இருந்தது. இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் டி.கே.சிவக்குமார், அவரது நண்பர்கள், தொழில் பங்குதாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில், டி.கே.சிவக்குமார் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதுகுறித்து அமலாக்கத்துறையினர் டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் 3-ந் தேதி டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். பின்னர் சிறையில் இருந்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது, சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினர் தங்களுக்கு கிடைத்த தகவல்களை சி.பி.ஐ.க்கு தெரிவித்திருந்தனர். இதையடுத்து, டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கர்நாடக அரசும், கடந்த ஆண்டு, செப்டம்பர் 19-ந் தேதி சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்கி இருந்தது.

அதே நேரத்தில் தன் மீது வழக்குப்பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்கி இருக்கும் கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரி டி.கே.சிவக்குமார் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் காரணமாக சி.பி.ஐ. அதிகாரிகள் டி.கே.சிவக்குமாரிடம் எந்த நேரத்திலும் விசாரணை நடத்தலாம் என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில், டி.கே.சிவக்குமாருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், அவரது வீடு, அலுவலகம், உறவினர் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று காலை திடீரென்று சோதனை நடத்தினார்கள்.

அதாவது பெங்களூரு சதாசிவநகரில் உள்ள டி.கே.சிவக்குமார் வீட்டிற்கு சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டு தாம்சன் ஜோஸ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை 6 மணிக்கு சென்றனர். அப்போது டி.கே.சிவக்குமார் வீட்டில் தான் இருந்தார். சி.பி.ஐ. அதிகாரிகளை பார்த்ததும் முதலில் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்துவதற்காக, பெங்களூருவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் இருந்து பெற்றுள்ள அனுமதியை டி.கே.சிவக்குமாரிடம் காட்டினார்கள். அதன்பிறகு, டி.கே.சிவக்குமாரின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

சோதனையின் போது டி.கே.சிவக்குமார், அவரது குடும்பத்தினரிடம் இருந்து செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இணையதள வசதியும் துண்டிக்கப்பட்டது. வீட்டில் இருந்து வெளியே செல்லவும், வெளியே இருந்து டி.கே.சிவக்குமார் வீட்டுக்கு யாரும் வருவதற்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. டி.கே.சிவக்குமாரின் வீடு முழுவதையும் சி.பி.ஐ. அதிகாரிகள் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினார்கள். அவருக்கு சொந்தமான கார்களிலும் சோதனை நடத்தப்பட்டது. பீரோல் மற்றும் லாக்கர்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அவரது வீட்டில் சோதனை நடந்த அதே நேரத்தில் டி.கே.சிவக்குமாரின் சகோதரரும், எம்.பி.யுமான டி.கே.சுரேசின் வீடு, அலுவலகங்கள், டி.கே.சிவக்குமாரின் சொந்த ஊரான ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா தொட்டஆலதஹள்ளியில் உள்ள வீடு, ஹாசனில் உள்ள நண்பரின் வீடு, டெல்லியில் உள்ள டி.கே.சுரேஷ் எம்.பி.க்கு சொந்தமான காவேரி அடுக்குமாடி குடியிருப்பு, டி.கே.சிவக்குமாரின் வீடு, மும்பையில் இருக்கும் அலுவலகம் என ஒட்டு மொத்தமாக 14 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள்.

கர்நாடகத்தில் மட்டும் 9 இடங்களிலும், டெல்லியில் 4 இடங்களிலும், மும்பையில் ஒரு இடத்தில் இந்த சோதனை நடந்திருந்தது. இந்த சோதனையில் 60-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். கனகபுரா அருகே தொட்டஆலதஹள்ளியில் உள்ள டி.கே.சிவக்குமாரின் வீட்டில் நடந்த சோதனையின் போது, அவரது தாய் கவுரம்மா இருந்தார். அந்த வீட்டில் நேற்று மதியம் 12.30 மணிவரை சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் அதிகாரிகளுக்கு சிக்கியதாக தெரிகிறது. பின்னர் கவுரம்மாவிடம் விசாரணை நடத்திவிட்டு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

இதுபோல, சதாசிவநகரில் உள்ள டி.கே.சிவக்குமாரின் வீட்டையொட்டி உள்ள டி.கே.சுரேஷ் எம்.பி.யின் வீட்டில் சோதனை நடக்கும் போதும், அவரும் அங்கிருந்தார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக்கொண்டனர். பின்னர் மாலை 4 மணியளவில் டி.கே.சுரேசின் வீட்டில் நடந்த சோதனை முடிவுக்கு வந்தது. அதைதொடர்ந்து டி.கே.சிவக்குமாரின் வீட்டுக்கு டி.கே.சுரேஷ் சென்றார். அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் தான் வரவழைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், டி.கே.சிவக்குமார் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் பல லட்சம் ரூபாய், தங்க நகைகள், சொத்து பத்திரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே நேரத்தில் அவரது வீட்டில் சிக்கிய ஆவணங்கள், நகை, பணம் குறித்து டி.கே.சிவக்குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். சட்டவிரோத பண பரிமாற்றம், சொத்து குவித்தது குறித்தும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் டி.கே.சிவக்குமாரின் மனைவி, மகளிடமும் அதிகாரிகள் விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6 மணிவரை நடந்தது. அவரது வீட்டில் சிக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்களை அதிகாரிகள் பரிசீலனை நடத்தினார்கள். பின்னர் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக வேண்டும் என்று டி.கே.சிவக்குமாரிடம் கூறிவிட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் புறப்பட்டு சென்றார்கள்.

இதற்கிடையில், கர்நாடகத்தில் காலியாக உள்ள சிரா, பெங்களூரு ஆர்.ஆர்.நகர் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கும், மேல்-சபையில் காலியாக உள்ள 4 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு தான் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருப்பதாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். அதே நேரத்தில் டி.கே.சிவக்குமாரின் வீட்டில் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டு முன்பு ஏராளமான காங்கிரசார் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூருவில் இளைஞர் காங்கிரசாரும் அனந்தராவ் சர்க்கிளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய பா.ஜனதா அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதாக கூறி, பிரதமர் மோடி, முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக காங்கிரசார் கோஷங்களை எழுப்பினார்கள். பெங்களூரு மட்டுமின்றி ராமநகர், பல்லாரி உள்பட மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் சி.பி.ஐ, மத்திய-மாநில பா.ஜனதா அரசுகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.கே.சிவக்குமார் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு சதாசிவநகரில் உள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீட்டில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுபோல, டி.கே.சிவக்குமார் வீட்டில் சி.பி.ஐ. நடத்திய சோதனையின் போது ரூ.57 லட்சம் சிக்கியது. இந்த தகவலை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

கர்நாடகத்தில் பெங்களூரு ஆர்.ஆர்.நகர் மற்றும் சிரா தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அந்த பணத்தை செலவு செய்ய டி.கே.சிவக்குமார் பதுக்கி வைத்தாரா? அல்லது அவரது சொந்த பணமா? என்பது தெரியவில்லை. அதுகுறித்து டி.கே.சிவக்குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News