செய்திகள்
ரியா சக்கரவர்த்தி, ஆதிர் சவுத்ரி

ரியா சக்கரவர்த்தியை மேலும் துன்புறுத்தாமல் விடுவிக்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி

Published On 2020-10-05 02:22 GMT   |   Update On 2020-10-05 02:22 GMT
மருத்துவ அறிக்கையின் மூலம் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான மர்மம் விலகிவிட்டதால் இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரியா சக்கரவர்த்தியை மேலும் துன்புறுத்தாமல் உடனடியாக விடுவிக்க வேண்டுமென மக்களவையின் காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொல்கத்தா :

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது தந்தை கே.சி.சிங் தனது மகன் சாவுக்கு நடிகை ரியா சக்ரவர்த்திதான் காரணம் என்று புகார் அளித்தார். இதையடுத்து, சுதஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையில் சுஷாந்த் சிங்குக்கு போதைப் பொருள் வாங்கிக் கொடுத்ததாக அவரது காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தி உள்ளிட்டவர்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். இந்தநிலையில் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் தடயவியல் பிரிவைச் சேர்ந்த 6 டாக்டர்கள் சி.பி.ஐ.க்கு தாக்கல் செய்த மருத்துவ அறிக்கையில் சுஷாந்த் சிங் மரணம் கொலையல்ல தற்கொலைதான் என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மருத்துவ அறிக்கையின் மூலம் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான மர்மம் விலகிவிட்டதால் இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரியா சக்கரவர்த்தியை மேலும் துன்புறுத்தாமல் உடனடியாக விடுவிக்க வேண்டுமென மக்களவையின் காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “சுஷாந்த் சிங்கின் மறைவால் நாம் அனைவரும் வேதனை அடைகிறேம். ஆனால் ஒரு பெண்ணை குற்றம் சாட்டப்பட்டவர் என்று பொய்யாக கூறி அவரை (சுஷாந்த் சிங்) மதிக்க முடியாது. ரியா சக்கரவர்த்தி ஒரு அப்பாவிப் பெண் என்று நான் முன்பே கூறியுள்ளேன். அவர் அரசியல் சதிக்கு பலியாகியுள்ளார். அவரை மேலும் துன்புறுத்தாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News