செய்திகள்
ராகுல் காந்தி

வேளாண் சட்டங்களை குப்பை கூடையில் வீசுவோம் -டிராக்டர் பேரணி துவக்க நிகழ்ச்சியில் ராகுல் ஆவேசம்

Published On 2020-10-04 09:16 GMT   |   Update On 2020-10-04 09:29 GMT
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்வதுடன், இந்த சட்ட ஆவணங்களை குப்பைக் கூடையில் வீசுவோம் என்று ராகுல் காந்தி பேசினார்.
மோகா:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு டிராக்டர் பேரணி நடத்துகிறார்.

முதல் நாளான இன்று பஞ்சாப் மாநிலம் மோகாவில் பேரணி தொடங்குகிறது. பேரணி துவக்க நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த வேளாண் சட்டங்களை அமல்படுத்தவேண்டிய அவசியம் என்ன வந்தது? என கேள்வி எழுப்பினார். அவர் மேலும் பேசியதாவது:-

இந்த சட்டங்களை அமல்படுத்த என்ன அவசரம்? நீங்கள் இந்த சட்டங்களை அமல்படுத்த வேண்டுமானால் மக்களவை-மாநிலங்களவையில் அதுபற்றி விவாதித்திருக்க வேண்டும். விவசாயிகளுக்காக சட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் கூறுகிறார். அப்படியானால், நீங்கள் ஏன் பாராளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதிக்கவில்லை?

இந்த சட்டங்களால் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தால், அவர்கள் ஏன் நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து போராடுகிறார்கள்? பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு விவசாயியும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்? காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், இந்த மூன்று கருப்புச் சட்டங்களையும் ரத்து செய்வதுடன், இந்த சட்ட ஆவணங்களை வேஸ்ட் பேப்பர் போடும் குப்பைக் கூடையில் வீசுவோம் என்று உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டங்களில், குறைந்தபட்ச ஆதரவு விலை கட்டாயம் என்று திருத்தம் செய்யப்படாத வரை, அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளால் எந்த பயனும் இல்லை என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பேசினார்.
Tags:    

Similar News